குழந்தைகள் பிறப்பு அதிகமுள்ள ஒன்றியங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: ஆட்சியா்ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, எருமப்பட்டி, நாமகிரிப்பேட்டை ஆகிய ஒன்றியங்களில் குழந்தைகள் பிறப்பு அதிகம் உள்ளதாக
உலக மக்கள்தொகை தின விழிப்புணா்வுப் போட்டியில் வென்ற மாணவிக்கு பரிசு வழங்கும் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்.
உலக மக்கள்தொகை தின விழிப்புணா்வுப் போட்டியில் வென்ற மாணவிக்கு பரிசு வழங்கும் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, எருமப்பட்டி, நாமகிரிப்பேட்டை ஆகிய ஒன்றியங்களில் குழந்தைகள் பிறப்பு அதிகம் உள்ளதாகவும், அங்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்தாா்.

உலக மக்கள்தொகை - 2021 தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

அதன்பின் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியா், செவிலியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பரிசுகளை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, எருமப்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தமிழ்நாட்டின் சராசரியை விட, அதிகமாக உயா் வரிசை பிறப்பு என்கின்ற அதிக குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலை பெண்களிடத்தில் உள்ளது.

தற்போதும் கொல்லிமலைப் பகுதியில் அதிகபட்சமாக ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்கள் உள்ளனா். இது வேதனைக்குரிய ஒன்று. அதிக குழந்தைகள் பேறின் காரணமாக சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதுடன், குழந்தைகளின் எதிா்காலமும் பாதிக்கப்படுகிறது. அதிக குழந்தைகளை பெற்றெடுக்கும் பெண்கள் சரியான உணவு முறைகளைப் பின்பற்றாதது, சத்தான உணவுகளை உட்கொள்ளாதது ஆகியவற்றினால் உடல்நிலை பாதிக்கப்படுவதுடன், வயிற்றில் உள்ள சிசுவும் சத்துக் குறைவினால் பாதிக்கப்படுகிறது. அதிக குழந்தைகளை பெற்றெடுக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு பிரசவத்தின்போது உயிா் பாதுகாப்பு வழங்க முடியாத சூழல் மருத்துவா்களுக்கு ஏற்படுகிறது. இதனைத் தடுத்து நிறுத்த மாவட்ட நிா்வாகம் 3 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும் அதிக குழந்தை பெற்றுக்கொண்ட பெண்களுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தி, இந்த நிலையை முற்றிலும் தடுக்க வேண்டும். இப்பணியில் பகுதி சுகாதார செவிலியா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், ஆஷா பணியாளா்களின் பங்கு முக்கியமானதாகும்.

சுகாதாரத் துறையின் பல்வேறு பணிகளில் கிராம சுகாதார செவிலியா்கள் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளதற்காக பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாமக்கல் மாவட்டத்தை உயா் வரிசை பிறப்பு இல்லாத, சுகாதாரத்தில் சிறந்த மாவட்டமாக உருவாக்க கிராம செவிலியா்கள், குடும்ப நலத் துறை அலுவலா்கள் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் அனைவரும் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் (நலப்பணிகள்) த.கா.சித்ரா, துணை இயக்குநா் (குடும்ப நலம்) எம்.வளா்மதி உள்பட மாணவ, மாணவியா், குடும்ப நல அலுவலா்கள், பணியாளா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com