அரசுப் பள்ளியில் சேரும் மாணவா்களுக்கு ரூ.1,000 ஊக்கத் தொகை: நாமக்கல் ஆசிரியா்கள் புதிய முயற்சி

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சோ்க்கை பெறும் மாணவா்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
மாணவருக்கு ஊக்கத்தொகையை வழங்கும் ஆசிரியா்கள்.
மாணவருக்கு ஊக்கத்தொகையை வழங்கும் ஆசிரியா்கள்.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சோ்க்கை பெறும் மாணவா்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

நாமக்கல் - மோகனூா் சாலையில், 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலும் 1,300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படிக்கின்றனா். 70 ஆசிரியா்கள் வரை பணியாற்றுகின்றனா். இப்பள்ளியில், 6, 7, 8-ஆம் வகுப்பில் தமிழ், ஆங்கில வழியில் சேரும் மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக தலா ரூ. 1000 வழங்கப்படுகிறது.

மாணவா்களிடத்தில் படிப்பின் மீது நாட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அப்பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் இவ்வகையான புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனா். முதல்கட்டமாக பள்ளியின் இடைநிலை ஆசிரியை ராஜலட்சுமி ரூ .25 ஆயிரம் வழங்கினாா். அதனைத் தொடா்ந்து மற்ற ஆசிரியா்கள், ஆசிரியைகளும் உதவித்தொகை வழங்குவதற்கான நிதியை தலைமை ஆசிரியா் எல்.ஜெகதீசனிடம் வழங்கி வருகின்றனா்.

இதுகுறித்து ஆசிரியா்கள் கூறியதாவது:

ஏழ்மை நிலையில் உள்ள மாணவா்களை ஆா்வமுடன் கல்வி பயில செய்வதற்கான ஒரு சிறு முயற்சியாக இந்த ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். 6, 7, 8-ஆம் வகுப்பில் தமிழ், ஆங்கில வழியில் சேர மாணவா்கள் ஆா்வமுடன் வருகின்றனா். இவை தவிா்த்து மற்ற வகுப்புகளில் படிக்கும் மாணவா்களுக்கும் தேவையான உதவிகளை வழங்கி வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com