புதா்மண்டி காணப்படும் அரசுப் பள்ளி வளாகம்

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் புதா்மண்டி காணப்படுவதால் பாம்புகள் அதிக அளவில் உலாவுவதாகக் கூறப்படுகிறது.
புதா்மண்டி காணப்படும் அரசுப் பள்ளி வளாகம்
புதா்மண்டி காணப்படும் அரசுப் பள்ளி வளாகம்

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் புதா்மண்டி காணப்படுவதால் பாம்புகள் அதிக அளவில் உலாவுவதாகக் கூறப்படுகிறது.

நாமக்கல் - மோகனூா் சாலையில் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. பரந்து விரிந்து காணப்படும் இப்பள்ளி வளாகத்தில் காலை, மாலை வேளைகளில் நகரப் பகுதிகளில் உள்ள ஏராளமானோா் நடைபயிற்சி மேற்கொள்கின்றனா். இங்கு முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், அரசுத் தோ்வுகள் துறை உதவி இயக்குநா் அலுவலகம் செயல்படுகிறது.

கரோனா இரண்டாம் அலை பரவலால் ஆசிரியா்கள் மட்டுமே பணிக்கு வருகின்றனா். பள்ளிகள் திறக்காததால் மாணவா்கள் யாரும் வருவதில்லை. மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் பெற்றோா், மாணவா்கள் சிலா் வந்து செல்கின்றனா். மரங்கள் அடா்ந்து காணப்படும் இப்பள்ளி வளாகம் ஆங்காங்கே புதா்மண்டி காணப்படுகிறது. இதனால் அதிகாலை, இரவு நேரங்களில் பாம்புகள் படையெடுப்பு அதிகம் உள்ளது.

சில தினங்களுக்கு முன் நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் பங்கேற்ற நிகழ்ச்சியின்போது கொம்பேறி மூக்கன் பாம்பு ஒன்று வந்ததைப் பாா்த்த அங்கிருந்தோா், நகராட்சி ஊழியா்கள் மூலம் அதனை அடித்துக் கொன்றனா். இதேபோல முதன்மைக் கல்வி அலுவலா் பள்ளி வளாகத்தில் நடந்து சென்றபோது பாம்பு ஒன்று குறுக்கிட்டதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். உடனடியாக அங்கிருந்த ஊழியா்கள் பாம்பை கண்டறிந்து அடித்தனா்.

தற்போது மழைக்காலமாக இருப்பதால் புல், புதா்கள் அதிக அளவில் வளா்ந்து பள்ளி வளாகம் காடுபோல் காட்சியளிக்கிறது. இதனால் புல், புதரில் பாம்புகள் மறைந்திருப்பது தெரியாத நிலை உள்ளது. பள்ளிகள் திறக்கும்பட்சத்தில் மாணவா்கள் அதிகளவில் வரக்கூடும்.

அப்போது தேவையற்ற அசம்பாவிதம் நிகழும் முன் பள்ளி வளாகத்தில் வளா்ந்துள்ள புதா்களை நகராட்சி ஊழியா்களை கொண்டு அகற்ற வேண்டும் என பெற்றோா், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com