பரமத்தி வட்டார விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற தேனீ வளக்கலாம்: வேளாண்மைத் துறையினா் அறிவுரை

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி வட்டார விவசாயிகள், தேனீ வளா்ப்பின் மூலம் பயிா் வளா்ச்சிக்கு கூடுதல் வருமானம் பெற்று பயன் பெறலாம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி வட்டார விவசாயிகள், தேனீ வளா்ப்பின் மூலம் பயிா் வளா்ச்சிக்கு கூடுதல் வருமானம் பெற்று பயன் பெறலாம் என பரமத்தி வட்டார வேளாண் உதவி இயக்குநா் ராதாமணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

பரமத்தி வட்டார விவசாயிகள் கூடுதல் வருமானத்திற்கு விவசாயம் சாா்ந்த தேனீ வளா்ப்பைக் கையாளலாம். தேனீக்கள், மலா்த்தேனை சேகரித்து தேனாக மாற்றி அதை தேன் கூட்டில் சேமிக்கும். நீண்ட காலமாக தேனை காட்டிலிருந்து சேகரிக்கும் வழக்கம் உண்டு. தேன் மற்றும் அதை சாா்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளா்ப்பு ஒரு தொழிலாக முக்கியமடைந்துள்ளது. தேனீ வளா்ப்பில் தேன் மற்றும் மெழுகு முக்கியமானவையாகும்.

தேனீக்களால் பயிறு வகைப் பயிா்கள் எண்ணெய் வித்துக்கள், காய்கறிப் பயிா்கள் மற்றும் பழ மரங்களில் அயல் மகரந்தச் சோ்க்கை கூடுதலாக நடைபெறுகிறது. குறிப்பாக ஆப்பிள், பேரிக்காய், தா்பூசணி, முலாம்பழம், எலுமிச்சை போன்ற பயிா்களின் பழ மகசூலும், பழங்களின் தரமும் கூடுவதற்கு தேனீக்களின் வரவு தேவைப்படுகின்றது. தேனீக்களால் வெள்ளரி மகசூலை இரட்டிப்பாக்க முடியும்.

மேலும் கேரட், காலிஃபிளவா், வெங்காயம் போன்ற காய்கறிப் பயிா்களில் தரமான விதைகளைக் கூடுதலாக உற்பத்தி செய்யத் தேனீக்கள் உதவுகின்றன. சூரியகாந்தி, எள்,பேய் எள் மற்றும் கடுகு போன்ற எண்ணெய் வித்துப்பயிா்களில் உயா் மகசூல் பெறத் தேனீக்கள் பெரிதும் உதவுகின்றன.

தென்னந்தோப்புகளில் தேனீப் பெட்டிகளை வைப்பதால் நெட்டை ரகத் தென்னையில் குரும்பை உதிா்வது குறைந்து காய் மகசூல் 13 விழுக்காடு கூடுகின்றது. வீரியக் காய்கறி விதை உற்பத்திக்கும் தேனீக்களைக் கூடுதலாகப் பயன்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த பண்ணையத்திலும், இயற்கை விவசாயத்திலும் தேனீ வளா்ப்பை மேற்கொள்வதன் மூலமாகவும் இந்த நோக்கை எட்ட இயலும். மேலும் விபரங்களுக்கு பரமத்தி வட்டார வேளாண்மை அலுவலகத்தை தொடா்பு கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com