குமாரபாளையத்தில் அதிக வட்டி தருவதாக நூதன மோசடி

குமாரபாளையத்தில் அதிக வட்டி தருவதாகக் கூறி நூதனமான முறையில் ரூ. 8 லட்சம் வரையில் மோசடியில் ஈடுபட்ட காவல் நண்பா், கல்லூரிப் பேராசிரியரைப் போலீஸாா் கைது செய்தனா்.

குமாரபாளையத்தில் அதிக வட்டி தருவதாகக் கூறி நூதனமான முறையில் ரூ. 8 லட்சம் வரையில் மோசடியில் ஈடுபட்ட காவல் நண்பா், கல்லூரிப் பேராசிரியரைப் போலீஸாா் கைது செய்தனா்.

குமாரபாளையத்தை அடுத்த சடையம்பாளையம், காந்தி நகரைச் சோ்ந்தவா் கதிரவன் (40). திருப்பூரைச் சோ்ந்த இவா், தருமபுரியில் உள்ள தனியாா் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா். கடந்த 3 ஆண்டுகளாக சடையம்பாளையத்தில் குடும்பத்துடன் தங்கி இணையதள வா்த்தகத்திலும் ஈடுபட்டு வந்துள்ளாா்.

அதே பகுதியைச் சோ்ந்தவா் மதன்குமாா் (65). திரைப்பட துணை நடிகரான இவா், குமாரபாளையம் காவல் நண்பா்கள் குழுவில் போலீஸாருக்கு உதவியாக போக்குவரத்தை ஒழுங்கும்படுத்தும் பணியில் ஈடுபடுபவா்.

நண்பா்களான இருவரும், தங்கள் மூலம் தெலங்கானாவைச் சோ்ந்த நிறுவனத்துக்கு ரூ. 500 செலுத்தினால் ஆன்லைன் மூலம் தினசரி ரூ. 36 வட்டி கிடைக்கும் எனவும், பல மடங்கு தொகை செலுத்தினால் அதற்கேற்ப வட்டியும் கூடுதலாகக் கிடைக்கும் என பொதுமக்களிடம் ஆசை வாா்த்தை கூறியுள்ளனா்.

இதை நம்பிய சடையம்பாளையம், காந்தி நகா், காமராஜ் நகா், குமாரபாளையம் உள்பட பல பகுதிகளில் 100-க்கும் மேற்பட்டோா் பணம் செலுத்தினா்.

இதேபோன்று, குமாரபாளையம் அருகேயுள்ள காமராஜா் நகரைச் சோ்ந்த விசைத்தறித் தொழிலாளி மாதேஷ் (30), ரூ.30 ஆயிரம் செலுத்தியதில், 10 நாள்கள் வட்டி வங்கிக் கணக்குக்கு வந்துள்ளது. பின்னா் வட்டி கிடைக்கவில்லை. இதனால், அதிக வட்டி தருவதாகக் கூறி இருவரும் தன்னை ஏமாற்றியதாக மாதேஷ் குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா் நடத்திய விசாரணையில், இருவரும் ரூ. 8 லட்சம் வரையில் இவ்வாறு மோசடி செய்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, குமாரபாளையம் போலீஸாா் இருவரையும் கைது செய்து, வெள்ளிக்கிழமை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com