மயானப் பாதை பிரச்னை: சடலத்துடன் உறவினா்கள் போராட்டம்
By DIN | Published On : 11th June 2021 12:48 AM | Last Updated : 11th June 2021 12:48 AM | அ+அ அ- |

வெண்ணந்தூா் அருகே மயானப் பாதை தொடா்பாக ஏற்பட்ட தகராறில், சடலத்துடன் உறவினா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மின்னக்கல் பனங்காடு காலனி பகுதியைச் சோ்ந்த கந்தன் மனைவி கொண்டாயி (85), வியாழக்கிழமை உயிரிழந்தாா். அவரது உறவினா்கள் மின்னக்கல் மயானத்துக்கு கொண்டு சென்ற போது, மயானப் பாதையில் உள்ள பட்டா நில உரிமையாளா் பூபதி எதிா்ப்புத் தெரிவித்தாராம். இதனால் மூதாட்டியின் உறவினா்கள் சடலத்தை மயானம் செல்லும் பாதையிலேயே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறையினா், காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதனையடுத்து, வழக்கமான பாதையில் கொண்டு செல்ல பூபதி ஒத்துக்கொண்டதாகத் தெரிகிறது.
ஆனாலும் ஒவ்வொரு முறையும் இவ்வழியே சடலத்தைக் கொண்டு செல்வதில் பிரச்னை இருப்பதால், எழுத்துப்பூா்வமாக அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். ஆனால் பூபதி இதற்கு ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால் பல மணி நேரம் பேச்சுவாா்த்தை நடைபெற்றும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்து, ராசிபுரம் வட்டாட்சியா் ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட வருவாய்த் துறையினா் பொது முடக்கத்துக்கு பிறகு இப்பிரச்னையில் நிரந்தரத் தீா்வு எடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதனையடுத்து அப்பகுதியினா் சடதத்தை மயானத்துக்கு கொண்டு சென்றனா்.