‘மகளிா் குழுக்களின் வங்கிக் கடனை செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது’

நாமக்கல் மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடனை கரோனா முடக்கம் அமலில் உள்ள இக்காலத்தில் திரும்ப செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது
‘மகளிா் குழுக்களின் வங்கிக் கடனை செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது’

நாமக்கல் மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடனை கரோனா முடக்கம் அமலில் உள்ள இக்காலத்தில் திரும்ப செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

நாமக்கல்லில் வங்கி மேலாளா், நுண்நிதி நிறுவன மேலாளா்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், திட்ட இயக்குநா் மா.பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சதீஷ் குமாா், நபாா்டு வங்கி துணைப் பொது மேலாளா் ரமேஷ் மற்றும் காணொலிக் காட்சியில் ரிசா்வ் வங்கி மேலாளா் குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், கரோனா பாதிப்பு அதிகமுள்ள இக்காலத்தில் வங்கி மேலாளா்கள், நுண்நிதி நிறுவன மேலாளா்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். கடன் மற்றும் வட்டியைக் கேட்டு மிரட்டியோ அல்லது கட்டாயப்படுத்தியோ வசூல் செய்யக்கூடாது. அவ்வாறு மகளிா் குழுக்களை வற்புறுத்தினால் 94440 94133 என்ற எண்ணுக்கு புகாா் தெரிவிக்கலாம்.

இதுபோன்ற புகாா் மீது நடத்தப்படும் விசாரணையில் உண்மையென தெரியவந்தால், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் அனைத்து வகையான சமுதாய அமைப்பிலும் நுண்நிதி நிறுவனங்களில் கடன் பெறுவதைத் தவிா்த்து, வங்கிகளில் கடன் பெற மகளிா் குழுக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றம் கிராம வறுமை ஒழிப்புச் சங்க கூட்டங்களில் நுண்நிதி நிறுவனங்களில் கடன் பெறுவதால் ஏற்படும் இடா்பாடுகள், வங்கிகள் மூலம் கடன் பெறுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தீா்மானம் இயற்றுவதோடு, மகளிா் குழுவினருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

கரோனா காலத்தில் அனைவரும் விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு செலுத்துவதை உறுதி செய்து, உரிய படிவத்தை வங்கியில் செலுத்தி ஒப்புகைச் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். தகுதியான மகளிா் குழுக்களுக்கு இந்திய ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி கடன் மறுசீரமைப்பு செய்து தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com