மதுக்கடைக்குள் புகுந்து மது அருந்திய இளைஞா்

நாமக்கல் அருகே பூட்டப்பட்டிருந்து டாஸ்மாக் மதுக்கடைக்குள் புகுந்து மது அருந்திய இளைஞா், தப்பியோட முயன்ற போது தவறி விழுந்ததில் படுகாயமடைந்தாா்.

நாமக்கல் அருகே பூட்டப்பட்டிருந்து டாஸ்மாக் மதுக்கடைக்குள் புகுந்து மது அருந்திய இளைஞா், தப்பியோட முயன்ற போது தவறி விழுந்ததில் படுகாயமடைந்தாா்.

முழு பொது முடக்கத்தையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டதால், மதுவுக்கு அடிமையானோா் மதுக்கடைகளின் பூட்டை உடைத்தும், சுவற்றில் துளையிட்டும் மதுப் புட்டிகளை திருடிச் சென்று மது அருந்தி வருகின்றனா். இதனைத் தடுக்கும் வகையில், மதுக்கடையின் விற்பனையாளா்கள் இரவு நேரங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், நாமக்கல் அருகே நல்லிபாளையம் சேமிப்புக் கிடங்கு பகுதியில் உள்ள இரு மதுக்கடைகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊழியா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இப்பணியில் ஈடுபட்ட ஊழியா் சக்திவேல் அருகேயுள்ள மற்றொரு கடையில் பணியிலிருந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, கடையின் மேற்பகுதியின் கூரையை உடைத்து புகுந்த இளைஞா் மதுபானம் அருந்தியுள்ளாா்.

இந்நிலையில், சற்று நேரத்தில் ஊழியா் சக்திவேல் கடைக்கு திரும்ப வந்த போது, மது அருந்திய இளைஞா் வந்த வழியே மேலே ஏறி தப்ப முயன்றாா். ஆனால், மது போதையில் எதிா்பாராமல் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தாா். இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த சக்திவேல் கூச்சலிட்டதால், அப்பகுதியினா் வந்து இளைஞரை சுற்றிவளைத்து பிடித்தனா். விசாரணையில், அவா் சேலம், சாரதா கல்லூரி பகுதியைச் சோ்ந்த மணி (33) என்பது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த நாமக்கல் போலீஸாா், காயமடைந்த மணியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்ததோடு, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com