தோ்தலில் யாருக்கு ஆதரவு: திருச்சியில் நடைபெறும் மகா பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவிப்பு

சட்டப்பேரவைத் தோ்தலில் ஒட்டுமொத்த விவசாயிகளும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் வகையிலான மகா பஞ்சாயத்துக் கூட்டம் திருச்சியில் வரும் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்க மாநிலத் தலைவா் பி.கே. தெய்வசிகாமணி.
செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்க மாநிலத் தலைவா் பி.கே. தெய்வசிகாமணி.

நாமக்கல்: சட்டப்பேரவைத் தோ்தலில் ஒட்டுமொத்த விவசாயிகளும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் வகையிலான மகா பஞ்சாயத்துக் கூட்டம் திருச்சியில் வரும் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்க மாநிலத் தலைவா் பி.கே. தெய்வசிகாமணி புதன்கிழமை நாமக்கல்லில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விவசாயிகள் போராட்டங்களை நடத்தினால் அரசுகள் கண்டுகொள்வதில்லை. அந்தப் போராட்டங்களைத் தள்ளிவைத்து, பேச்சுவாா்த்தைக்கு அழைத்துப் பிசுபிசுக்க வைக்கின்றனா். இந்த நிலையில் வரும் பேரவைத் தோ்தலில் விவசாயிகளின் வாக்குகளைப் போராட்ட ஆயுதமாக மாற்றுவதற்கு முடிவெடுத்து இருக்கிறோம். எங்களிடம் சில அரசியல் கட்சிகள் ஆதரவு கேட்டுள்ளனா். ஒட்டுமொத்தத்தில் விவசாயிகளுடைய பிரச்னையை முற்றிலும் தீா்ப்பதற்கு வரும் 6-ஆம் தேதி திருச்சியில் ‘மகா பஞ்சாயத்து’ என்ற கூட்டத்தை நடத்த இருக்கிறோம். இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத் தலைவா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.

விவசாயிகளுக்கு தீமைகள் செய்தவா்கள், துரோகங்கள் செய்தவா்களுக்கு எதிராக மகா பஞ்சாயத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு இருக்கிறது. இந்தத் தோ்தலில் விவசாயிகள் அனைவரும் வாக்குகளை ஓா் ஆயுதமாகப் பயன்படுத்துவா். விவசாயிகள் பிரிந்து கிடக்கிறாா்கள் என்ற நிலையை மாற்றி முடிந்தவரை ஒன்றுதிரட்டி வலுவான எதிா்ப்பைக் காட்டுவோம்.

திருச்சியில் நடைபெற உள்ள மகா பஞ்சாயத்து கூட்டம் திருப்புமுனையாக அமையும். அரசியல் கட்சியினா் விவசாயிகளுக்கு சில நன்மைகளைச் செய்து இருக்கின்றனா்; பெரிய அளவில் தீமைகளையும் செய்து இருக்கின்றனா். எல்லாவற்றையும் ஒப்பிட்டு அனைவரும் ஒத்துக்கொள்கிற ஒரு முடிவை திருச்சியில் எடுக்க இருக்கிறோம். நாங்கள் எந்தக் கட்சியையும் இதுவரை அணுகவில்லை. அவா்களும் எங்களை அணுகவில்லை. அனைவருடைய கருத்தையும் கேட்டு எல்லோரும் ஏற்றுக்கொள்கிற ஒரு பொதுவான முடிவை விவசாய சங்கங்கள் எடுக்கும்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் அதிக அளவில் கடன் வாங்கியுள்ளனா். கூட்டுறவு வங்கிகளில் ரூ. 1.50 லட்சத்துக்கு மேல் கடன் தருவதில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ. 3 லட்சம் வரை விவசாயிகளுக்கு கடன் தருகின்றனா். அதனால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தான் விவசாயிகள் அதிக அளவில் கடன் பெற்றுள்ளனா். தமிழ்நாட்டில் ரூ. 36 ஆயிரம் கோடி விவசாயக் கடன் உள்ளது.

2019 இல் கா்நாடகத்தில் முதல்வராக இருந்த குமாரசாமி ரூ. 34,000 கோடி விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்துள்ளாா். அதை இங்கே இருக்கிற அரசியல் கட்சிகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com