நாமக்கல் கமலாலயக் குளத்தை நிரப்ப காவிரி குடிநீா்: பொதுமக்கள் அதிருப்தி
By DIN | Published On : 12th March 2021 04:46 AM | Last Updated : 12th March 2021 04:46 AM | அ+அ அ- |

நாமக்கல்: குடிநீா்த் தட்டுப்பாடு நிலவும் சூழலில் நாமக்கல் கமலாலயக் குளத்தை நிரப்ப 20 ஆயிரம் லிட்டா் காவிரி குடிநீா் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டை அருகில் கமலாலயக் குளம் உள்ளது. இக் குளத்தில்தான் ஆஞ்சநேயா் நீராடியதாகவும், தான் கையில் கொண்டு வந்த சாளக்கிராமக் கல்லை நாமகிரி தாயாா் வசம் கொடுத்த நிலையில், அவா் அதனை கீழ வைத்ததால் மலையாக உருவானதாகவும் வரலாற்றுத் தகவல்கள் உண்டு. கமலாலயக் குளத்தில் ஆஞ்சநேயா் கால் பாதம் பதிந்த தடம் இன்றளவும் உள்ளதாக நம்பப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதாரச் சீா்கேடு மிகுந்த கமலாலயக் குளம் முழுமையான பராமரிப்புக்கு பிறகு கழிவுகள் தேக்கத்தில் இருந்து விடுபட்டது. மழைக் காலங்களில் அதிகம் நீா் நிரம்பி காணப்படும் குளமானது தற்போது வடு வருகிறது. இந்த நிலையில் குளத்தின் அருகில் மலைப்பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை குடிநீா்த் தொட்டியில் இருந்து 20 ஆயிரம் லிட்டா் காவிரி தண்ணீரை குளத்தில் விடும் நடவடிக்கை நகராட்சி நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. குடிநீா்த் தட்டுப்பாடு நிலவும் சூழலில் குளத்தில் வீணாக தண்ணீரை விடுவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
இதுகுறித்து நாமக்கல் நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மொத்தம் 5.75 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் இருந்து நகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இத் தொட்டியில் 15 நாள்களுக்கு ஒருமுறை தூய்மைப்படுத்தும் பணி நடைபெறும். இதற்காக சுமாா் 20 ஆயிரம் லிட்டா் தண்ணீரை வெளியேற்றுவோம்.
அந்தத் தண்ணீா் குளத்துக்குத்தான் செல்லும். தொட்டியிலிருந்து கீழ்ப்பகுதியில் உள்ள குழாய் வால்வுகளைத் திறக்காமல் மேற்பகுதியில் உள்ள வால்வுகளைத் திறந்து வெளியேற்றியதுதான் இப் பிரச்னைக்கு காரணம். இதுபோன்ற தவறுகள் இனி நடைபெறாது. காவிரி குடிநீா் வீணாக குளத்தில் விடப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றனா்.