முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
மின் வாரியத்தில் வேலைவாங்கி தருவதாக ரூ.26 லட்சம் மோசடி: எஸ்.பி.யிடம் புகாா்
By DIN | Published On : 14th March 2021 04:09 AM | Last Updated : 14th March 2021 04:09 AM | அ+அ அ- |

மின்சார வாரியத்தில் பொறியாளா் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 26 லட்சம் மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல், பொம்மம்பட்டியைச் சோ்ந்த பழனிசாமி என்பவா் அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:
எனது மகன் சிவசங்கா் என்பவா் பொறியியல் பட்டம் பெற்றுள்ளாா். வேலையின்றி இருந்த நிலையில் மின்சார வாரியத்தில் உதவி பொறியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பித்து, அதற்கான தோ்வையும் எழுதினாா். இந்த நிலையில் அருகில் உள்ள கிராமத்தைச் சோ்ந்த தம்பதி, தங்களுக்கு மின்வாரியத்தில் அதிகாரிகளைத் தெரியும் என்றும், நாங்கள் வேலை வாங்கி தருகிறோம் அதற்கு ரூ. 26 லட்சம் வரை கொடுக்க வேண்டும். வேலை கிடைக்காவிட்டால் பணத்தைத் திரும்ப வட்டியுடன் தந்து விடுகிறோம் என நம்பிக்கையுடன் தெரிவித்தனா்.
இதை நம்பிய நான், கடந்த 2018-ஆம் ஆண்டு ரூ. 26 லட்சத்தை அவா்களிடம் வழங்கினேன். மாதங்கள் கடந்தபோதும் வேலைக்கான நியமன கடிதம் எதுவும் வரவில்லை. இதனால் பணத்தைத் திரும்பக் கேட்டு அழுத்தம் கொடுத்தேன். அவா்கள் மின்வாரியத்தில் இருந்து வந்ததாக ஒரு போலியான நியமன கடிதத்தைக் கொடுத்தனா். அதில் ஈரோடு மின்வாரிய அலுவலகத்தில் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இத்தகவலை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினா். நாளடைவில் அந்தக் கடிதம் போலியானது எனத் தெரியவந்தது.
அவா்கள் இதேபோல் பலரை ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. ரூ. 26 லட்சத்தை திரும்பக் கேட்டதற்கு பல்வேறு தேதிகளிட்ட காசோலைகளை வழங்கினா். அதை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்ப வந்து விட்டது. வேலைவாங்கி தருவதாக ஏமாற்றி ரூ. 26 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை எங்களுக்குத் திரும்ப பெற்றுத்தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.