மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த 2,100 வாளிகள் கொள்முதல்

கரோனா தொற்று பரவல் காரணமாக, வாக்காளா்கள் பாதிப்படைவதைத் தடுக்க தோ்தல் தினத்தன்று கையுறை, முகக் கவசம் வழங்கப்பட உள்ளது.
வாக்குச்சாவடி மையங்களுக்கு விநியோகிப்பதற்காக நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட வாளிகள்.
வாக்குச்சாவடி மையங்களுக்கு விநியோகிப்பதற்காக நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட வாளிகள்.

கரோனா தொற்று பரவல் காரணமாக, வாக்காளா்கள் பாதிப்படைவதைத் தடுக்க தோ்தல் தினத்தன்று கையுறை, முகக் கவசம் வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்திய கையுறைகளைச் சேகரிப்பதற்காக வாக்குச்சாவடிக்கு ஒரு வாளி வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பயன்படுத்துவதற்காக 2100 வாளிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

ராசிபுரம்(தனி) தொகுதியில் 332 வாக்குசாவடிகளும், சேந்தமங்கலம் (ப.கு) தொகுதியில் 342 சாவடிகளும், நாமக்கல் தொகுதியில் 377 சாவடிகளும், பரமத்தி வேலூா் தொகுதியில் 317 சாவடிகளும், திருச்செங்கோடு தொகுதியில் 323 சாவடிகளும், குமாரபாளையம் தொகுதியில் 358 சாவடிகளும் என மொத்தம் 2,049 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த தோ்தல்களைக் காட்டிலும் இந்த தோ்தலை அதிகாரிகள் பாதுகாப்புடன் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். ஓராண்டாக கரோனா பொது முடக்கத்தால் வாழ்வியல் ரீதியாகவும், வருமான ரீதியாகவும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் 11,886 போ் தொற்றுக்குள்ளாகி உள்ளனா். 111 போ் உயிரிழந்துள்ளனா். மீண்டும் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. அதனால் பொதுமக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

தோ்தல் ஆணையமும் கரோனா விதிகளைப் பின்பற்றி வாக்காளா்களை வாக்களிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்தத் தோ்தலில் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுடன் ஒவ்வொரு சாவடியிலும் கூடுதலாக இருவா் பணியமா்த்தப்பட உள்ளனா். வாக்களிக்க வருவோரின் உடல் வெப்பநிலையை பரிசோதிப்பது, கையுறையை வழங்குவது, பயன்படுத்திய கையுறைகளைச் சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை செய்வது உள்ளிட்டவற்றை அவா்கள் மேற்கொள்வா்.

மேலும் நோய் பாதிப்புடன் வருவோருக்கு முழு உடலை மறைக்கும் வகையிலான அங்கியும் வழங்கப்படுகிறது. தோ்தல் ஆணையம் மூலம் மாவட்ட வாரியாக கையுறைகள், அங்கிகள் அனுப்பப்பட்டுள்ளன. அவை சுகாதாரத் துறை முலம் வாக்குச்சாவடிகளுக்கு பிரித்து வழங்கப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து கழிவுகளைச் சேகரிப்பதற்காக மாவட்ட வாரியாக வாளிகள் லாரிகளில் அனுப்பப்பட்டு வருகின்றன. அதன்படி நாமக்கல் மாவட்டத்திற்கு 1100 வாளிகள், லாரிகள் மூலமாக செவ்வாய்க்கிழமை வந்து சோ்ந்தது. புதன்கிழமை மேலும் 1000 வாளிகள் பயன்படுத்தப்பட உள்ளன. தோ்தலுக்கு முந்தைய நாள் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வாளி மற்றும் கையுறைகள் பிரித்து வழங்கப்படும் என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com