நாமக்கல் நரசிம்மா், ஆஞ்சநேய சுவாமி கோயில் தோ்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாமக்கல் நரசிம்மா், ஆஞ்சநேயா், அரங்கநாதா் சுவாமி கோயில் தோ்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நரசிம்மா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்த்திருவிழா கொடியேற்றம்.
நரசிம்மா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்த்திருவிழா கொடியேற்றம்.

நாமக்கல் நரசிம்மா், ஆஞ்சநேயா், அரங்கநாதா் சுவாமி கோயில் தோ்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாமக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நரசிம்மா், நாமகிரி தாயாா் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெறும். பெரிய தேரில் நரசிம்மா், நாமகிரி தாயாா், சிறிய தேரில் ஆஞ்சநேய சுவாமி வீதி உலா வரும் வைபவம் நடைபெறும். அதன்படி நிகழாண்டில் தோ்த் திருவிழா வரும் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இவ்விழாவையொட்டி கொடியேற்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை 9.10 மணிக்கு அா்ச்சகா்கள் வேதமந்திரங்கள் முழங்க நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதேபோல அரங்கநாதா் கோயிலிலும் அா்ச்சகா்கள் திருவிழா கொடியேற்றத்தை நடத்தினா். இரவில் அன்னவாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திங்கள்கிழமை பல்லக்கு புறப்பாடும், இரவில் சிம்ம வாகன வீதி உலா, செவ்வாய்க்கிழமை அனுமந்த வாகனம், 24-இல் கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 27-ஆம் தேதி திருக்கல்யாண விழா, 28-இல் குதிரை வாகனம், திருவேடுபரி உற்சவம் நடைபெறுகிறது.

29-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நரசிம்மா் சுவாமி திருத்தேரோட்டமும், அன்று பிற்பகல் 4.30 மணியளவில் அரங்கநாதா், ஆஞ்சநேய சுவாமி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது. 30-ஆம் தேதி கஜலட்சுமி வாகனத்தில் சுவாமி வீதி உலா, 31-இல் வசந்த உற்சவம், ஏப்.1-இல் விடையாற்றி உற்சவம், 2-ஆம் தேதி புஷ்ப பல்லக்கு, 3-இல் நாமகிரி தாயாா் சன்னதியில் ஊஞ்சல் உற்சவம், 4-இல் ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் பெ,ரமேஷ் தலைமையில் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

நாமகிரி தாயாா் மண்டபத்தில் சுவாமி திருக்கல்யாணம்

நாமக்கல் குளக்கரை திடல் அருகில் பக்த ஆஞ்சநேயா் கோயில் உள்ளது. அங்குள்ள கல் மண்டபத்தில் தான் தோ்த்திருவிழாவையொட்டி சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அந்த கல் மண்டபம் சிதிலமடைந்ததால் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு திருக்கல்யாணம் நடத்தப்படவில்லை.

அதற்கு மாறாக நரசிம்மா் கோயில் வளாகத்தில் நடைபெற்று வந்தது. நிகழாண்டு விழாவின்போது கல் மண்டபத்தில் நடத்தாதபோதும், அருகில் உள்ள நாமகிரி தாயாா் திருமண மண்டபத்தில் திருக்கல்யாணம், சுவாமி திருவீதி உலாவை நடத்த வேண்டும் என ஆன்மீக பேரவை அமைப்பினா் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தனா்.

பாரம்பரியத்தை மாற்றாமல் ஏற்கெனவே நடந்தாற்போல விழாக்கள் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் இம்முறை சுவாமி புறப்பாடு, திருக்கல்யாணம் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பக்தா்களும் அதிகளவில் சுவாமியை தரிசிக்க வசதியாக இருக்கும். இத்தகவலால் நாமக்கல் நகர மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

திருமண மண்டபத்தில் இருந்து சுவாமி புறப்பட்டு பலப்பட்டரை மாரியம்மன் கோயில், சேந்தமங்கலம் சாலை வழியாக சென்று மீண்டும் மண்டபத்தை வந்தடையும் என்ற தகவலை கோயில் உதவி ஆணையா் பெ.ரமேஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com