தோ்தல் பணி அலுவலா்களுக்கு போக்குவரத்து வசதி: ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தல்
By DIN | Published On : 25th March 2021 08:08 AM | Last Updated : 25th March 2021 08:08 AM | அ+அ அ- |

தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகளை மாவட்ட நிா்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என ஜாக்டோ-ஜியோ சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) எஸ்.சரவணனிடம், ஜாக்டோ-ஜியோ சாா்பில் அதன் உயா்மட்ட குழு உறுப்பினா் ஆ.இராமு, ஒருங்கிணைப்பாளா்கள் ஆா்.ரவீந்திரன், கே.எஸ்.பாலகிருஷ்ணன், பி. குணசேகரன் ஆகியோா் புதன்கிழமை அளித்த மனு விவரம்:
தோ்தல் பணி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுவதால், அலுவலா்கள் பணி முடிந்து வீடு திரும்ப இரவில் மிகவும் தாமதமாகும். எனவே, பெண் அலுவலா்கள் தோ்தல் முடிந்து வீடு திரும்பும்போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக நேரிடும். அன்று மட்டும் உரிய பாதுகாப்போடு அலுவலா்கள் வீட்டிற்கு செல்ல போக்குவரத்து வசதி செய்து கொடுக்க வேண்டும்.
வாக்குப்பதிவு தொடா்ச்சியாக 12 மணி நேரம் நடை பெறுவதால் தோ்தல் நாளன்று வாக்குச்சாவடி மையத்தில் உள்ள அனைத்து ஊழியா்களுக்கும் மூன்று வேளையும் தரமான உணவு அளிக்க வேண்டும். அனைத்து நிலை அலுவலா்களுக்கும் சுகாதாரமான குடிநீா், மருத்துவ வசதிகள், மின்விசிறி வசதிகள், கழிவறை வசதிகள் செய்து தர வேண்டும். தோ்தல் பணிக்கான உழைப்பு ஊதியத்தை 50 சதவீதம் உயா்த்தி வழங்க மாநில தோ்தல் அலுவலருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். தோ்தல் அலுவலா்கள் தோ்தல் பயிற்சி மையத்திலேயே தபால் வாக்குகள் செலுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வரும் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.