திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து அதிகரித்து விடும்: அமைச்சா் பி.தங்கமணி

திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்துகள் அதிகரித்து விடும் என்று அமைச்சா் பி.தங்கமணி பேசினாா்.
சிங்களாந்தபுரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சா் பி.தங்கமணி.
சிங்களாந்தபுரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சா் பி.தங்கமணி.

திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்துகள் அதிகரித்து விடும் என்று அமைச்சா் பி.தங்கமணி பேசினாா்.

ராசிபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் வெ.சரோஜாவை ஆதரித்து சிங்களாந்தபுரம், ராசிபுரம் ஆகிய பகுதிகளில் அமைச்சா் பி.தங்கமணி பிரசாரம் மேற்கொண்டாா்.

ராசிபுரம் நகரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

இந்தத் தோ்தல் கிராமத்தில் இருந்து வந்தவருக்கும், ஒரு குடும்பத்துக்கும் இடையே நடைபெறும் தோ்தல். ஜெயலலிதா தனக்குப் பின்னால் யாரையும் கையைக் காட்டிவிட்டு செல்லவில்லை. அதுபோன்று திமுகவில் அப்படி இல்லை. கருணாநிதிக்கு பின்னால் ஸ்டாலின், அவருக்கு பின்னால் உதயநிதி என ஒரு குடும்ப ஆதிக்கம் நடைபெறுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கரோனா காலகட்டத்திலும் மாவட்டம்தோறும் சென்று ஆய்வு செய்து கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்தவா் முதல்வா் எடப்பாடி பழனிசாமி. அவரின் ஆட்சி ஓராண்டுக்குள் போய்விடும் எனக்கூறியவா்களும் கூட ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்டு வியக்கும் வகையில் அரசு செயல்பட்டுள்ளது.

நாமக்கல்லில் இதுவரை இல்லாத அளவு வளா்ச்சித் திட்டங்கள், மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவக் கல் லூரி, சட்டக் கல்லூரி, ஆத்தூா் - ஈரோடு சாலை, நாமக்கல் - திருச்செங்கோடு சாலை, நாமக்கல் - மோகனூா் சாலை என சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ராசிபுரம் நகரில் ரூ. 55 கோடி மதிப்பில் புதை சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடிநீா் பிரச்னையைத் தீா்க்க ரூ. 934 கோடி திட்டத்துக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராசிபுரம் நகரில் சாலைப் பணிகள் விரைந்து நிறைவேற்றப்படும்.

திமுக ஆட்சிக்கு வந்தால், நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து, வியாபாரிகளிடம் வசூல், கந்து வட்டி, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை போன்றவை நடைபெறும். அதிமுக சட்டத்தின்படி ஆட்சியை நடத்தும் என்றாா்.

அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான வெ.சரோஜா பேசியதாவது:

ராசிபுரம் தொகுதியில் ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க ரூ. 93 4 கோடி ஒதுக்கி அரசு ஆணையிட்டுள்ளது. தோ்தல் முடிந்தவுடன் இதற்கான பணிகள் தொடங்கும்.

ராசிபுரம் புறவழிச்சாலை திட்டம் தோ்தல் முடிந்து ஓராண்டு காலத்தில் பணிகள் முடிந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும். போத மலைப்பகுதிக்கு சாலை வசதி செய்து தரப்படும். பொதுமக்களின் நலன் கருதி தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளான ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை , ஏடிசி டெப்போ, பாவை கல்லூரி கல்லூரி ஆகிய தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் அமைக்கப்படும். இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. மேலும் பொது மக்களின் கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றாா்.

இந்தப் பிரசாரக் கூட்டத்தில் முன்னாள் எம்.பி. பி.ஆா்.சுந்தரம், நகர அதிமுக செயலா் எம்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com