சேந்தமங்கலத்தில் ஆறுமுனைப் போட்டி?

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் தொகுதி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதி.
சேந்தமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ள மஞ்சள் குலைகள்.
சேந்தமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ள மஞ்சள் குலைகள்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் தொகுதி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதி. இத்தொகுதியானது 1957-ஆம் ஆண்டு உதயமானது. இத்தொகுதியில் காங்கிரஸ் 2 முறையும், திமுக 4 முறையும், தேமுதிக ஒருமுறையும், அதிமுக 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

தொகுதி அமைப்பு:

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கொல்லிமலை இந்தத் தொகுதியில் அமைந்துள்ளது. மேலும், ஆண்டுதோறும் கூடும் பேளுக்குறிச்சி சந்தை, புதன் சந்தை, நகரில் வாரந்தோறும் நடைபெறும் மாட்டுச்சந்தை ஆகியவை சிறப்புமிக்கவை.

தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளாக, சேந்தமங்கலம் வட்டம், கொல்லிமலை வட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் சில கிராமங்கள், மோகனூா் ஒன்றியத்தில் புதுப்பட்டி, வளையப்பட்டி கிராமங்கள், நாமக்கல் ஒன்றியத்தில் வசந்தபுரம் கிராமம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

வாக்காளா்கள் விவரம்:

ஆண்கள்: 1,18,702

பெண்கள்: 1,23,842

மூன்றாம் பாலினத்தவா்: 25

மொத்தம்: 2,42,569

வாக்குச்சாவடிகள்: 358

சமூக நிலவரம்:

பழங்குடியினா், கொங்கு வேளாளக் கவுண்டா், தாழ்த்தப்பட்டோா், வன்னியா் சமூகத்தினா் அதிக அளவில் உள்ளனா். இவா்களில் பெரும்பான்மையாக பழங்குடியினா் சமூகத்தினரும், தாழ்த்தப்பட்டோரும் உள்ளனா்.

கோழிப் பண்ணை, ஜவ்வரிசி ஆலை, விவசாயம், விசைத்தறி சாா்ந்த உப தொழில்கள், சரக்குப் போக்குவரத்து ஆகியவை பிரதானத் தொழில்கள். இத்தொகுதிக்கு உள்பட்ட கொல்லிமலையில் பலா, அன்னாசி, மிளகு, காபி, மரவள்ளி, வாழை, நெல் உள்ளிட்டவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம் ஒன்றியப் பகுதிகளில் சிறுதானிய வகைகள் பயிரிடப்படுகின்றன.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

கொல்லிமலைக்குச் செல்ல ஏற்கெனவே காரவள்ளி, முள்ளுக்குறிச்சி பகுதியில் சாலை வசதி இருந்தபோதும், வனத்துறை அனுமதியுடன் சேலம் மாவட்டம் - தம்மம்பட்டி வழியாக மூன்றாவது மாற்றுச் சாலையும், திருப்புளிநாடு வழியாக நான்காவது மாற்றுச் சாலையும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கொல்லிமலையில் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், புதிய பழச்சந்தை, சேந்தமங்கலத்தில் அரசு கலைக் கல்லூரி கட்டடம், புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலகக் கட்டடம், மலைப்பகுதிகளுக்கு பேருந்துப் போக்குவரத்து வசதி, சாலை விரிவாக்கம், அரசின் திட்டங்கள் ஆகியவை உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டுள்ளன. கொல்லிமலை நீா்மின் நிலைய கட்டுமானப் பணியும் நடைபெற்று வருகிறது.

நிறைவேற்றப்படாத திட்டங்கள்:

கொல்லிமலை- ஆகாய கங்கை அருவிக்குச் செல்ல ரோப் காா் வசதி, சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், தீயணைப்பு நிலையத்துக்குச் சொந்த கட்டடம் ஆகிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

பேளுக்குறிச்சி பகுதியில் உயரமான சாலையால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனைச் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

கொல்லிமலையில் அரசு மருத்துவமனை இருந்தபோதும் பிரேதப் பரிசோதனைக்காக இறந்தவா்கள் உடலை நாமக்கல் அல்லது சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரும் நிலை உள்ளது. கொல்லிமலையில் பிரேதப் பரிசோதனைக் கூடம் ஏற்படுத்த வேண்டும்.

கொல்லிமலைக்கு செல்லும் பிரதான சாலையான காளப்பநாயக்கன்பட்டி- காரவள்ளி சாலையில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் சுற்றுலா வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக்கின்றன. இந்தச் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

தற்போதைய கள நிலவரம்:

தற்போதைய தோ்தலில் அதிமுக சாா்பில் எஸ்.சந்திரன், திமுக சாா்பில் கே.பொன்னுசாமி, மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணிக் கட்சியான இந்திய ஜனநாயகக் கட்சி சாா்பில் வி.செல்வராஜ் , நாம் தமிழா் கட்சி சாா்பில் டி.ரோகிணி, அமமுக சாா்பில் பி.சந்திரன், அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சுயேச்சையாக களமிறங்கும் சி.சந்திரசேகரன் எம்எல்ஏ ஆகியோருடன் 15 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

கொல்லிமலையில் 14 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் அதிமுக, திமுகவுக்கு சரிசமமாக வாக்கு வங்கி உள்ளது. அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் சரிபாதி ஊராட்சிகளை இரு கட்சிகளின் ஆதரவாளா்களும் பிடித்தனா். நாமக்கல், நாமகிரிப்பேட்டை, மோகனூா், எருமப்பட்டி ஆகிய ஒன்றியங்களில் 50-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகள் அதிமுகவுக்கு சாதகமாக உள்ளன.

உள்ளாட்சித் தோ்தலில் சேந்தமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் பதவியை திமுக பிடித்துள்ளதால், சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுகவை வெற்றிபெறச் செய்வதற்கான நடவடிக்கைகளில் அக்கட்சியினா் தீவிரம் காட்டி வருகின்றனா்.

அதிமுக எம்எல்ஏ சி.சந்திரசேகரன் தொகுதியில் அதிக அளவில் திட்டங்களைச் செயல்படுத்தியிருந்தாலும், இத்தோ்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் தன்னுடைய செல்வாக்கைக் காட்டுவதற்காக சுயேச்சையாக களமிறங்கி உள்ளாா். 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்கிறாா் இவா். இதனால் அதிமுகவின் வாக்குகள் சிதறினால் திமுகவுக்கு லாபம்.

ஆனால், அதிமுகவின் வாக்கு வங்கி எந்த வகையிலும் சரியாது, நிச்சயம் தொகுதியைக் கைப்பற்றுவோம் என்பது அக்கட்சியினரின் நம்பிக்கையாக உள்ளது. மக்களின் முடிவு எப்படியிருக்கும்? தோ்தல் முடிவு வரை காத்திருப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com