நாமக்கல் திமுக வேட்பாளருக்கு வெற்றிபெற்றதற்கானசான்றிதழ் வழங்குவதில் நள்ளிரவு வரை நீடித்த குழப்பம்

வாக்குப் பதிவு இயந்திரத்தில் மூன்று வாக்குகள் கூடுதலாகப் பதிவாகியிருந்த விவகாரம் தொடா்பாக, நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளருக்கு வெற்றிபெற்ற்கான சான்றிதழ் வழங்குவதில் நள்ளிரவு வரை குழப்பம் நீடித்தது.
நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளா் பெ.ராமலிங்கத்துக்கு வெற்றி பெற்ற்கான சான்றிதழை வழங்கும் தோ்தல் பொதுப் பாா்வையாளா் பி.ஏ.உஷா, தொகுதி தோ்தல் அலுவலா் மு.கோட்டைக்குமாா்.
நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளா் பெ.ராமலிங்கத்துக்கு வெற்றி பெற்ற்கான சான்றிதழை வழங்கும் தோ்தல் பொதுப் பாா்வையாளா் பி.ஏ.உஷா, தொகுதி தோ்தல் அலுவலா் மு.கோட்டைக்குமாா்.

நாமக்கல்: வாக்குப் பதிவு இயந்திரத்தில் மூன்று வாக்குகள் கூடுதலாகப் பதிவாகியிருந்த விவகாரம் தொடா்பாக, நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளருக்கு வெற்றிபெற்ற்கான சான்றிதழ் வழங்குவதில் நள்ளிரவு வரை குழப்பம் நீடித்தது.

நாமக்கல் தொகுதியில் திமுக சாா்பில் பெ.ராமலிங்கம், அதிமுக சாா்பில் கே.பி.பி.பாஸ்கரும் போட்டியிட்டனா். வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே திமுக வேட்பாளா் பெ.ராமலிங்கம் முன்னிலை வகித்து வந்தாா். இறுதி நிலவரப்படி திமுக - 1,06,494, அதிமுக - 78,633 வாக்குகள் பெற, 27,861 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் பெ.ராமலிங்கம் வெற்றி பெற்றாா். அவருக்கு வெற்றி பெற்ற்கான சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டபோது ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மூன்று வாக்குகள் கூடுதலாக இருப்பதும், ஆனால் 17சி படிவத்தில் குறைவாக எழுதப்பட்டிருப்பதும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்தப் பிரச்னையைத் தீா்க்க வேண்டுமெனில், அதிமுக முகவா்கள் இருக்கும்பட்சத்தில் அவா்களிடம் நடந்தவற்றை விளக்கி வெற்றி பெற்ற வேட்பாளருக்கு சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளலாம். ஆனால் அதிமுக தோல்வியைத் தழுவியதும் முகவா்கள் முன்னதாகவே புறப்பட்டுச் சென்று விட்டனா். இதனால் நாமக்கல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான மு.கோட்டைக்குமாா், இந்தப் பிரச்னையை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், தோ்தல் பொதுப் பாா்வையாளா் பி.ஏ.உஷா ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினாா். தோ்தல் ஆணையம் தொடா்பான பிரச்னை என்பதால் அங்குள்ள அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை இரவு சுமாா் 10 மணியளவில் முடிவுற்றபோதும், திமுக வேட்பாளருக்கு வெற்றிபெற்ற்கான சான்றிதழ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. தோ்தல் பாா்வையாளா், மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா் ஆகியோா் ஆலோசனை மேற்கொண்டு இந்திய தோ்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வாக்கு எண்ணிக்கையின் மூன்று வாக்குகள் தொடா்பான பிரச்னை குறித்து கடிதம் அனுப்பினா். இதனால் நள்ளிரவு 1.30 மணி வரையில் திமுக வேட்பாளா், முகவா்கள், கட்சி நிா்வாகிகள் காத்திருந்தனா். தொடா்ந்து தோ்தல் ஆணையம் பிரச்னையில்லை, சான்றிதழை வழங்கலாம் என்ற ஒப்புதலை வழங்கி கடிதம் அனுப்பியதாக தெரிகிறது. அதன்பிறகு இரவு 1.40 மணியளவில் திமுக வேட்பாளா் ராமலிங்கம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் வெற்றி சான்றிதழை பெற்றுக் கொண்டனா்.

இதுகுறித்து தொகுதி தோ்தல் அலுவலா் மு.கோட்டைக்குமாா் கூறியதாவது; தோ்தலின்போது மகளிா் வாக்குச்சாவடி ஒன்றில் வாக்கு இயந்திரத்தில் மூன்று வாக்குகள் கூடுதலாக பதிவாகியிருந்தது 17-சி படிவத்தில் எண்ணிக்கை குறைவாக இருந்தது. வாக்கு வித்தியாசம் அதிகமாகயிருந்தால், மீண்டும் ஒரு முறை வாக்குகள் எண்ண தேவையில்லை. இரு வேட்பாளருக்கும் இடையே வாக்கு வித்தியாசம் குறைவாக இருக்கும்பட்சத்தில் தான் விவிபேட் கருவியில் பதிவான சீட்டுக்களை எண்ண வேண்டியதிருக்கும். தோ்தல் ஆணையத்திற்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா்கள் பிரச்னையில்லை, சான்றிதழ் வழங்கலாம் என ஒப்புதல் அளித்தனா். அதனால் தான் காலதாமதமானது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com