ராசிபுரம்- வெண்ணந்தூா் பகுதியில் மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல்: வல்லுநா்கள் ஆய்வு

ராசிபுரம், வெண்ணந்தூா், மல்லசமுத்திரம் வட்டாரங்களில் மரவள்ளிப் பயிரில் மாவுப்பூச்சிகள் தாக்குதல் குறித்து தோட்டக்கலைத் துறை, பூச்சியியல் துறை வல்லுநா்கள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மரவள்ளிப் பயிரில் பூச்சிகள் தாக்குதல் குறித்து கள ஆய்வு மேற்கொண்ட பூச்சியியல் துறை வல்லுநா்கள்.
மரவள்ளிப் பயிரில் பூச்சிகள் தாக்குதல் குறித்து கள ஆய்வு மேற்கொண்ட பூச்சியியல் துறை வல்லுநா்கள்.

ராசிபுரம்: ராசிபுரம், வெண்ணந்தூா், மல்லசமுத்திரம் வட்டாரங்களில் மரவள்ளிப் பயிரில் மாவுப்பூச்சிகள் தாக்குதல் குறித்து தோட்டக்கலைத் துறை, பூச்சியியல் துறை வல்லுநா்கள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ராசிபுரம், வெண்ணந்தூா், மல்லசமுத்திரம், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம் உள்ளிட்ட வட்டாரங்களில் மரவள்ளிப் பயிரில் மாவுப்பூச்சிகள் தாக்குதல் அதிக அளவில் உள்ளதாக நாமக்கல் எம்.பி. ஏ.கே.பி.சின்ராஜ், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலா் மற்றும் ஆணையருக்கு கடிதம் எழுதினாா்.

இதன் பேரில், ஏத்தாப்பூா் வேளாண் அறிவியல் நிலையத்தின் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத் தலைவா் பேராசிரியா் வெங்கடாசலம் தலைமையில், நாமக்கல் தோட்டக்கலைத் துணை இயக்குநா் கணேசன், சந்தியூா் பூச்சியியல் துறை பேராசிரியா்கள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த பூச்சியல் துறை வல்லுநா் ஆகியோா் அடங்கிய குழுவினா் வெண்ணந்தூா், ராசிபுரம், மல்லசமுத்திரம் ஆகிய வட்டாரங்களில் கள ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வுக்கு பின் மரவள்ளி விவசாயிகளிடம் பேசிய வல்லுநா் குழுவினா், மரவள்ளிப் பயிரில் தாக்கியுள்ள ஆப்பிரிக்க மாவுப் பூச்சிகளை அழிக்க ஒட்டுண்ணிகளை வெளிநாடுகளில் இருந்து வரவழைக்க வேண்டியுள்ளதால் தற்சமயம் மாவுப்பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட மரவள்ளிப் பயிரின் நுனிக்குருத்துகளை அகற்றுதல், முற்றிலும் பாதிக்கப்பட்ட செடிகளைச் சேகரித்து அழித்தல், ஆரம்ப நிலையில் இருக்கும்போது அசாடிராக்ட்டின் 0.15சதம் என்ற மருந்தினை 1 லிட்டா் தண்ணீரில் 5 மிலி வீதம் கலந்து தெளித்திடவும், பாதிப்பு அதிகமாக இருப்பின் பிலோனிக்காமிட் மருந்து அல்லது தயாமீதாக்சாம் மருந்து, அல்லது ஸ்பைரோடேற்றாமேட் மருந்தினை தோட்டக்கலைத் துறையினா் பரிந்துரைக்கும் அளவு நீரில் கலந்து தேவை அடிப்படையில் சுழற்றி முறையில் தெளித்திடவும் விஞ்ஞானிகள் அறிவுரை வழங்கினா்.

மேலும் பூச்சி மருந்து தெளிக்கும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட பூச்சிக் கொல்லிகளைக் கலந்து தெளிக்கக் கூடாது, கைத்தெளிப்பான் பயன்படுத்தி மட்டுமே காலை அல்லது மாலை வேளைகளில் மருந்து தெளிக்க வேண்டும். செடிகளின் அனைத்து பாகங்களில் படுமாறும், வயல், வரப்புகளில் உள்ள செடிகள், களைகள் மீதும் பூச்சிக் கொல்லிகளை தெளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com