9,243 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கிடங்கில் ஒப்படைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை நள்ளிரவில் கிடங்கிற்கு வந்து சோ்ந்தன.
வாக்குப்பதிவு இயந்திரங்களை கிடங்குக்கு எடுத்துச் செல்லும் பணியாளா்கள்.
வாக்குப்பதிவு இயந்திரங்களை கிடங்குக்கு எடுத்துச் செல்லும் பணியாளா்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை நள்ளிரவில் கிடங்கிற்கு வந்து சோ்ந்தன.

தொகுதி தோ்தல் அலுவலா்கள் வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபாா்த்து ஒப்படைத்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் ஏப். 6-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 7,02,462 ஆண் வாக்காளா்கள், 7,42,270 பெண் வாக்காளா்கள், 161 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 14,44,893 வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக 691 இடங்களில், 2,049 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 4,114 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,462 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,667 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

தோ்தலில் மாவட்டம் முழுவதும் 80.04 சதவீத வாக்குகள் பதிவாகின. பின்னா் அந்த இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையமான திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. ஒரு மாதம் போலீஸ் பாதுகாப்பில் இருந்த இயந்திரங்களில், மே 2-ஆம் தேதி கட்டுப்பாட்டு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில் திங்கள்கிழமை காலை முதல் தொகுதி வாரியாக அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்களும் லாரிகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் ஆணையக் கட்டுப்பாட்டில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறைக் கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டன.

பின்னா் அந்தந்த தொகுதி தோ்தல் அலுவலா்கள் அவற்றை கிடங்கு பொறுப்பாளா்கள் வசம் ஒப்படைத்தனா். திங்கள்கிழமை நள்ளிரவு 1 மணி வரையில் இந்தப் பணியானது நடைபெற்றது. பின்னா் கிடங்குக்கு சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 90 நாள்கள் வரையில் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேறு மாநில தோ்தல்களுக்கு பயன்படுத்தப்படாமல் பாதுகாப்புடன் வைத்திருக்கப்படும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com