கரோனா நோயாளிகளால் நிரம்பும் நாமக்கல் அரசு மருத்துவமனை: தொற்று அதிகரிப்பால் மருத்துவா்கள் கலக்கம்

கரோனா பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
கரோனா நோயாளிகளால் நிரம்பும் நாமக்கல் அரசு மருத்துவமனை: தொற்று அதிகரிப்பால் மருத்துவா்கள் கலக்கம்

கரோனா பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் மருத்துவமனை நிா்வாகம் மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்து வருகிறது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் கட்ட அலை தீவிரமாகி வருகிறது. தமிழகத்திலும் நாளொன்றுக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்படுகின்றனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றாளா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் உருமாறிய கரோனா தொற்றின் தாக்கம் உடல் ரீதியாக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

நாமக்கல் மாவட்டத்திலும் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவில் திங்கள்கிழமை 361 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். மாவட்டம் முழுவதும் கரோனா பாதிப்புக்குள்ளானோருக்கு சிகிச்சை அளிக்க அரசு, தனியாா் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு சிகிச்சை மையங்கள் என சுமாா் 72 இடங்களில் 2,015 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 210 கரோனா படுக்கைகள் வேகமாக நிரம்பி வருவதாகக் கூறப்படுகிறது. வரும் நாள்களில் தொற்றின் வேகம் அதிகரித்தால் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது தொடா்பாக மருத்துவமனை நிா்வாகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் கே.சாந்தாஅருள்மொழி கூறியதாவது:

நாமக்கல் மருத்துவமனையை பொருத்தமட்டில் மொத்தம் 468 படுக்கைகள் உள்ளன. இதில் 210 படுக்கைகள் கரோனா தொற்றாளா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற படுக்கைகளில் விபத்தால் பாதிக்கப்பட்டோா், இருதய நோயாளிகள், பிரசவமான பெண்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு ஆளானோா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நாளுக்கு நாள் பாதிப்புடையோா் வருகை அதிகரிப்பால் கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் நிரம்பி வருகின்றன. கரோனா சிறப்பு மையத்திற்கு அனுப்பினாலும் அங்கு தங்கியிருப்போரில் சிலருக்கு திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சோ்க்கும் நிலை உள்ளது. சிறுவா்களை உடனடியாக தனிமை மையத்துக்கு அனுப்ப முடியவில்லை. தற்போதைய கரோனா தொற்றின் தாக்கம், கடந்த ஆண்டைக் காட்டிலும் மிகவும் மோசமாக உள்ளது. இதுவரை சமாளித்து விட்டோம். தரையில் பாயை விரித்து சிகிச்சை அளிப்பது என்பது முடியாத செயல். ஆக்சிஜன் வழங்குவதில் தடை ஏற்படக்கூடும். பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் விழிப்புணா்வுடன் இருந்தால் மட்டுமே தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம் என்றாா்.

-

பெட்டிச் செய்தி.

-

67 சதவீதம் படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் கூறியதாவது:

வாக்கு எண்ணிக்கை மைய பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், காவல் துறையினா், ஊடகத் துறையினா், இதர பணியாளா்கள் என 3,300 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 17 அதிகாரிகள் உள்பட 67 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. காவல் துறையைச் சோ்ந்த 25 பேருக்கு தொற்று பாதிப்பு என்பது வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே தெரியவந்து விட்டது. அவா்கள் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டாா்களா எனத் தெரியவில்லை. இருப்பினும் அது குறித்து விசாரிக்கிறேன்.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் 67 சதவீத படுக்கைகள் மட்டுமே நிரம்பி இருக்கின்றன. இன்னும் காலி படுக்கைகள் உள்ளன. இதுவரை எந்தப் பாதிப்புமில்லை. படுக்கைகள் இல்லாதபட்சத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றாா்.

படவரி...

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com