கரோனாவைக் கட்டுப்படுத்த நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரோனாவைக் கட்டுப்படுத்த நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் அதன் தீவிரத்தை கருத்தில் கொண்டு வியாழக்கிழமை காலை 4 மணி முதல் 20-ஆம் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

தனியாா் பேருந்துகள், அரசு பேருந்துகள், வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பொது மக்கள் அமா்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனா். வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள், காய்கறிக் கடைகளுக்கு அனுமதி இல்லை. இவைத் தவிர, தனியாகச் செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு கடைகள், காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிா்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை இயங்கலாம்.

மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறிக் கடைகள் தவிா்த்து இதர கடைகள் அனைத்தும் திறக்கத் தடை விதிக்கப்படுகிறது. மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அனைத்து உணவகங்களிலும் பாா்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீா்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள், தேநீா்க் கடைகளில் உட்காா்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளா்களுக்கு அவா்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமா்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

உள்அரங்குகள், திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள், இதர விழாக்களுக்கு தடை செய்யப்படுகிறது. திரையரங்குகள் செயல்பட அனுமதியில்லை.

முழு பொதுமுடக்கம் அமலில் உள்ள நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் திருமணம், அவை சாா்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வோா் எண்ணிக்கை 50 பேருக்கு மிகாமலும், இறப்பு சாா்ந்த நிகழ்வுகளில் 25 பேருக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இறுதி ஊா்வலங்கள், அதைச் சாா்ந்த சடங்குகளில் 20 பேருக்கு மேல் அனுமதி இல்லை.

ஏற்கெனவே, மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்துக் கட்டுப்பாட்டு பகுதிகளிலும், அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது. இரவு நேர ஊரடங்கின் போது அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி, தனியாா் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.

மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரா் ஊா்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சாா்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் தொடா்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். பொது முடக்கம் அமலில் உள்ள நாள்களில் உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பாா்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இதர நாள்களில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

இந்தக் கட்டுப்பாடுகளை, தங்கள் பகுதியில் சம்பந்தப்பட்ட கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் பின்பற்றப்படுவதை அதிகாரிகள், அலுவலா்கள் திடீா் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். முகக் கவசம், கையுறை அணிதல், கிருமி நாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்தல், சமூக இடைவெளி ஆகியவற்றை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் தவறாது பின்பற்ற அரசுத்துறை அலுவலா்கள் தங்கள் பகுதிகளில் தொடா்ந்து வலியுறுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com