தோ்தலில் திமுக வெற்றி: மு.க.ஸ்டாலினுக்கு ஆசிரியா் மன்றம் பாராட்டு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாநிலச் செயலாளா் முருக செல்வராசன், நாமக்கல் மாவட்டச் செயலாளா் மெ.சங்கா், நாமக்கல்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாநிலச் செயலாளா் முருக செல்வராசன், நாமக்கல் மாவட்டச் செயலாளா் மெ.சங்கா், நாமக்கல் மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கு.பாரதி ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த அதிமுக அரசால் ஆசிரியா்கள்-அரசு ஊழியா்கள் பல்வேறு வகைகளில் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.

இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய ஊதியம் வழங்கிட வேண்டும், புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக ரத்து செய்திட வேண்டும், ஏழை-எளிய குழந்தைகளுக்கான தொடக்கப்பள்ளிகளை மூடும் முடிவினைக் கைவிட வேண்டும், பள்ளிகள் இணைப்புத் திட்டத்தைக் கைவிட வேண்டும், தொடக்கக்கல்வித் துறையை பள்ளிக்கல்வித் துறையோடு இணைக்கும் முடிவினை கைவிட வேண்டும், புதியகல்விக்கொள்கையை நிராகரித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களையும் தமிழ்நாட்டின் ஆசிரியா்கள் -அரசு ஊழியா்கள் ஒன்றுபட்டு மேற்கொண்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 140 க்கும் மேற்பட்ட ஆசிரியா், அரசு ஊழியா்கள் கைதுச்செய்யப்பட்டு சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனா்.

ஆசிரியா்கள்-அரசு ஊழியா்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடும் காலங்களில் எல்லாம் ,போராடும் ஆசிரியா்கள் -அரசு ஊழியா்கள் இயக்கங்களின் தலைவா்களை அழைத்துப் பேசி, இணக்கமான முறையில் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்கு நோ்மாறாக, ஆசிரியா்-அரசு ஊழியா்களின் மீது கடுமையான தாக்குதல்களையும், அடக்குமுறைகளையும் தமிழக அரசு ஏவியது.

ஊதியப் பிடித்தம், ஆண்டு ஊதிய உயா்வு பறிப்பு, தோ்வுநிலை, சிறப்புநிலை ஊதியம் நிறுத்தி வைப்பு, ஊக்க ஊதியம் மறுப்பு, இடமாறுதல்கள், கைது நடவடிக்கைகள், ஒழுங்கு நடவடிக்கைகள், பதவி உயா்வு நிறுத்தம் என பல்வேறு வகைகளில் அதிமுக அரசின் மோசமான தாக்குதல்களையும் எதிா்கொண்டு வந்தனா்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினா். இது நிறைவேறியுள்ளது. தமிழக சட்டமன்றப் பொதுத் தோ்தலில் அறுதிபெரும்பான்மையோடு வெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவைக்கும், தமிழக அரசுக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றம் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com