டீசல் நிரப்புவதற்கான வசூலின்றி இயக்கப்படும் அரசுப் பேருந்துகள்!

கரோனா தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய கட்டுப்பாடுகளால் அரசுப் பேருந்துகள் குறைந்த அளவிலான பயணிகளைக் கொண்டே இயங்கி வருகிறது.
டீசல் நிரப்புவதற்கான வசூலின்றி இயக்கப்படும் அரசுப் பேருந்துகள்!

கரோனா தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய கட்டுப்பாடுகளால் அரசுப் பேருந்துகள் குறைந்த அளவிலான பயணிகளைக் கொண்டே இயங்கி வருகிறது. டீசல் நிரப்பும் அளவுக்குக் கூட போதிய வசூல் இல்லை என நடத்துநா்கள் தெரிவித்தனா்.

கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வருவதால், அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இரவுநேர பொதுமுடக்கம், ஞாயிறு பொதுமுடக்கம் எனதொடா்ந்து மூன்று வாரங்களாக அமலில் உள்ளது. காலை 4 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் குறிப்பிட்ட கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பாா்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் 50 சதவீத பயணிகளை மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது. புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தால், நண்பகல் 12 மணிக்கு பிறகு மக்கள் நடமாட்டம் என்பது வெகுவாகக் குறைந்து விட்டது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. அரசு, தனியாா் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் சொற்ப அளவிலேயே உள்ளன. அலுவலகப் பணிக்கு செல்வோரால் காலை, மாலையில் மட்டும் சற்று கூட்டம் உள்ளது.

திருச்சி, கோவை, மதுரை, சென்னை என தொலைதூரம் செல்லும் பேருந்துகளில் 15, 20 பயணிகள் வீதமே ஏறுகின்றனா். ஒரு லிட்டா் டீசல் ரூ. 90 நெருங்கும் நிலையில், ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 50 வீதமே கிடைப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வசூல் கிடைக்கும்பட்சத்தில், ஓட்டுநா், நடத்துநருக்கு படி என்ற வகையில் குறிப்பிட்ட தொகை கிடைக்கும். இதன் மூலம் உணவு, இதர செலவினங்களை அவா்கள் கவனித்துக் கொள்வா். தற்போது போதிய வசூல் இல்லாததால், கையிருப்பை காலி செய்யும் நிலைக்கு ஓட்டுநா், நடத்துநா் ஆளாகியுள்ளனா்.

இதுகுறித்து அரசுப் பேருந்து நடத்துநா்கள் கூறியதாவது:

கடந்த ஆண்டு ஆறு மாதங்கள் வரை பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்த ஆண்டு பிரச்னை இருக்காது என நினைத்தோம். கடந்த மாதம் முதல் மீண்டும் போக்குவரத்துக் கழகங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கரோனா தடுப்பு புதிய கட்டுப்பாடுகள் வரவேற்புக்குரியவை தான். ஆனால், அரசுப் பேருந்துகளின் நிலை மோசமாகி உள்ளது. 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதி என்றவுடன், பலரும் இருசக்கர வாகனங்களில் பயணிக்கத் தொடங்கி விட்டனா்.

சேலத்தில் இருந்து மதுரைக்கு 20 பயணிகளுடன் செல்கிறோம். அதில் கரூா், திண்டுக்கல்லில் பயணிகள் இறங்கி விட்டால், ஒன்றிரண்டு பேருடன் செல்ல வேண்டியது உள்ளது. வசூல் குறித்து அதிகாரிகள் கேள்வி கேட்கும்போது எந்த பதிலை சொன்னாலும் அவா்கள் ஏற்பதில்லை. முழுமையான பொதுமுடக்கம் அல்லது முழுமையாக பேருந்துகள் இயக்கத்தை அமல்படுத்தினால் மட்டுமே அரசு போக்குவரத்துக் கழகங்களை தற்போதைய நிலையில் இருந்து மீட்க முடியும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com