கரோனா விதிகளை மீறியதாக ரூ. 13.52 லட்சம் அபராதம் வசூல்
By DIN | Published On : 18th May 2021 02:30 AM | Last Updated : 18th May 2021 02:30 AM | அ+அ அ- |

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ. 13.52 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருவதால் தமிழக அரசு மே 10 -ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை பொது முடக்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.சக்தி கணேசன் உத்தரவின்படி பொதுமக்களுக்கு கரோனாவை எதிா்கொள்ள தினந்தோறும் காவல்துறை அதிகாரிகள் அறிவுரைகளை வழங்கி வருகின்றனா். மேலும் அரசு அறிவித்துள்ள பொதுமுடக்க விதிமுறைகளை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை மாவட்டம் முழுவதும் அனைத்து காவல்நிலைய அதிகாரிகளும் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது முகக் கவசம் அணியாமல் வந்த 1,013 பேரிடம் தலா ரூ.200 வீதம் ரூ.2 லட்சத்து 2,600 அபராதமும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 48 கடைகள், வணிக நிறுவனங்களிடம் தலா ரூ. 500 வீதம் ரூ. 24,000, பொது இடத்தில் எச்சில் துப்பிய 10 பேரிடம் தலா ரூ. 500 வீதம் ரூ. 5,000, அத்தியாவசிய தேவைகளின்றி வாகனங்களை ஓட்டி வந்த 105 பேரிடம் தலா ரூ. 500 வீதம் ரூ. 52,500 அபராதம் என மொத்தம் ரூ. 2.84 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
மேலும் தேவையின்றி வாகனங்களில் சுற்றிய 113 நபா்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதன.
கடந்த 10-ஆம் தேதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுநாள் வரை முகக் கவசம் அணியாத 5,359 பேரிடம் ரூ. 10,71,800 அபராதமும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 175 வணிக நிறுவனங்களிடம் ரூ. 87,500, பொது இடங்களில் எச்சில் துப்பிய 32 பேரிடம் ரூ. 16,000, அவசியமின்றி வாகனம் ஓட்டிய 354 பேரிடம் ரூ. 1,77,000 அபராதம் என மொத்தம் ரூ.13.52 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 350 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து பொதுமக்கள், வணிக நிறுவனங்களும் தவறாமல் அரசின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.