திருச்செங்கோட்டில் கரோனா தொற்றாளா்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடக்கம்

திருச்செங்கோட்டில் கரோனா தொற்றாளா்களுக்கு சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
திருச்செங்கோட்டில் கரோனா தொற்றாளா்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடக்கம்

திருச்செங்கோட்டில் கரோனா தொற்றாளா்களுக்கு சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் 50 படுக்கைகள் வசதியுடன் கூடிய கொரோனா சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் முன்னிலை வகித்தாா். இம்மையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் கோ.செல்வமூா்த்தி விளக்கம் அளித்தாா்.

சித்த மருத்துவ சிகிச்சையால் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் விரைவாக குணமடைந்தனா். தற்போது கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், சித்த மருத்துவ சிகிச்சையின் பயன் இத்தருணத்திலும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக புதிதாக கரோனா சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையங்களை ஏற்படுத்த அரசு உத்தரவிட்டது.

அதனடிப்படையில் விவேகானந்தா மகளிா் தொழில்நுட்ப கல்லூரியில் 50 படுக்கைகள் வசதியுடன் கூடிய சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் இரண்டு சித்த மருத்துவா்கள், ஒரு மருந்தாளுநா், இரண்டு செவிலியா்கள், ஒரு கண்காணிப்பு அலுவலா் மற்றும் ஒரு உதவியாளா் என மொத்தம் 7 போ் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனா்.

சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு முதலில் நுழைவு பெட்டகம் எனப்படும் மருந்து பெட்டகம் வழங்கப்படுகிறது. இப்பெட்டகத்தில் தாளிசாதி சூரண மாத்திரை, ஆடாதோடை மணப்பாகு, அமுக்கரா சூரண மாத்திரை, பிரமானந்த பைரவ மாத்திரை, திப்பிலி ரசாயனம் ஆகிய மருந்து பொருள்கள் இருக்கும்.

காலை, மாலையில் கபசுரக் குடிநீா், நிலவேம்பு குடிநீா் வழங்கப்படும். ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க கரோனா நோயாளிகளுக்கு கிராம்பு குடிநீரும் வழங்கப்படுகிறது.

கிராம்பு, ஓமம், மஞ்சள், மிளகு, இஞ்சி மற்றும் அதிமதுரம் உள்ளிட்ட மூலிகை பொருள்களை சோ்த்து கசாயமாக காய்ச்சி 60 மில்லி அளவை 10 நிமிடத்துக்கு ஒருமுறை அருந்தினால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் என மருத்துவா் விளக்கமளித்தாா். மேலும், சித்தா் பிராணயாம மூச்சு பயிற்சி, லிங்க முத்திரை, நாத சுத்தி பயிற்சி ஆகிய பயிற்சிகளும் கரோனா தொற்று உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. கரோனா நோயாளிகள் ஒரு வாரம் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனா். அவா்கள் குணமடைந்து வீடு திரும்பும் போது தமிழக அரசின் ஆரோக்கியம் என்ற மருந்து பெட்டகம் வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு வட்டாட்சியா் எஸ்.கண்ணன், ஒருங்கிணைப்பாளா் (சித்த மருத்துவம்) வெங்கடபிரகாசம், மாணிக்கம்பாளையம் வட்டார மருத்துவ அலுவலா் கருணாகரன், கொக்கராயன்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பாபுராதாகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com