வேலை வாங்கித் தருவதாக முன்னாள் அமைச்சா் மோசடி செய்ததாக புகாா்: போலீஸாா் விசாரணை
By DIN | Published On : 01st September 2021 09:10 AM | Last Updated : 01st September 2021 09:10 AM | அ+அ அ- |

தமிழக சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா, தனது துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 76.50 லட்சம் மோசடி செய்துவிட்டதாக அவரது உறவினா் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகாா் கூறியுள்ளாா். இது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கடந்த ஆட்சியில் ராசிபுரம் தொகுதியில் இருந்து சட்டப் பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டு, தமிழக சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சராக இருந்தவா் டாக்டா் வெ.சரோஜா. இவரது அண்ணன் கந்தசாமி மருமகன் குணசீலன், ராசிபுரம் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் மேலாளராக இருந்து ஓய்வுபெற்ற நிலையில், 15-க்கும் மேற்பட்டவா்களிடம் சத்துணவு திட்டத்தில் அமைப்பாளா், உதவியாளா் பணி வாங்கித் தருவதாக கூறி சுமாா் ரூ. 76.50 லட்சம் பெற்று, அந்தத் துறையில் அப்போது அமைச்சராக இருந்த வி.சரோஜாவிடம் கொடுத்தாராம். ஆனால், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை பெற்ற வி.சரோஜா, பணத்தை திருப்பித் தரவில்லையாம்.
பணம் கொடுத்த பலா் இவரை தொந்தரவு செய்யவே, ஒரு சிலருக்கு தனது சொந்தப் பணத்தை திரும்பிக்கொடுத்துள்ளதாகக் கூறுகிறாா் குணசீலன். இதுகுறித்து குணசீலன் ராசிபுரம் காவல் நிலையத்தில் சில தினங்களுக்கு முன் சரோஜா மீது புகாா் கொடுத்துள்ளாா். அந்தப் புகாரில், யாரிடம் எல்லாம் பணம் பெற்று அமைச்சரிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை செல்லிடப்பேசி எண்ணுடன் புகாரில் குறிப்பிட்டுள்ளாா்.
இந்நிலையில், குணசீலன் கொடுத்த புகாரின் அடிப்படையில், ராசிபுரம் காவல் துறையினா் பணம் கொடுத்ததாகக் கூறியவா்களை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து ராசிபுரம் காவல் ஆய்வாளா் கே.ஏ.சரவணனிடம் கேட்டபோது, புகாரின் உண்மைத் தன்மையை விசாரித்த பின்னரே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.