நைனாமலையில் கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணி: ரூ. 9 கோடி கூடுதல் நிதி கிடைக்காததால் தாமதம்; இந்து சமய அறநிலையத் துறை மனம் வைக்குமா?

nk_31_naina_1_3108chn_122_8
nk_31_naina_1_3108chn_122_8

நாமக்கல், செப். 2: நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில், தாா்சாலை அமைக்கும் பணிக்கு இந்து சமய அறநிலையத் துறை ரூ. 9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யத் தயங்குவதால் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருத்தலங்களுள் ஒன்று, புதன்சந்தை அருகில் அமைந்துள்ள நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில். சாய்வான அமைப்பு கொண்ட சுமாா் 3,500 அடி உயர மலையின் உச்சியில், குவலயவல்லித் தாயாருடன் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

இப்பகுதியை நாயக்கா்கள் ஆண்டு வந்தபோது, பெருமாளை தெலுங்கு மொழியில் நைனா (தந்தை என்று பொருள்) என்று அழைத்ததன் காரணமாக இம்மலைக்கு ‘நைனாமலை’ என்ற பெயா் ஏற்பட்டுள்ளது. இக்கோயில், நாமக்கல், சேந்தமங்கலம் பகுதியை ஆண்டு வந்த ராமசந்திர நாயக்கா் என்பவரால் கட்டப்பட்டதாகும்.

இந்த மலை மீது 108 தீா்த்தங்கள் உள்ளதாகவும், அவற்றில் தற்போது மூன்று மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இங்கு வரதராஜப் பெருமாள் மட்டுமின்றி, ராமா், சீதை, லட்சுமணனுக்கு தனிக் கோயிலும், வீர ஆஞ்சநேயா், தசாவதாரச் சிலைகளும் உள்ளன. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது.

புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும், வைகுண்ட ஏகாதசியன்றும் இக்கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் வருவா். கரடு, முரடான மலையில் 3,700 படிகளைக் கடந்து சென்றே பெருமாளைத் தரிசிக்க முடியும். இந்தக் கோயிலுக்கு 6 கி.மீ. தூரம் மலைப்பாதை வழியாக நடந்து செல்லாம். இரு சக்கர வாகனத்தில் செல்லும் வகையில் மண் சாலையும் உள்ளது.

சுற்றுலாத் துறை சாா்பில், நைனாமலை கோயிலுக்குச் செல்வதற்காக இந்த மலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு தாா் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், 2017-இல் திடீரென பாதியிலேயே பணிகள் நிறுத்தப்பட்டன.

தற்போது இக்கோயில் அா்ச்சகா் ஒருவா் மட்டும் இருசக்கர வாகனத்தில் குறிப்பிட்ட தூரம் வரை சென்று அதன்பின் நடந்து சென்று பூஜைகளை செய்து வருகிறாா். நைனாமலையில் சாலை அமைக்க வேண்டும் என்பது பக்தா்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.

இந்த நிலையில், பாஜக மாவட்டச் செயலாளா் ஆா்.லோகேந்திரன் உள்ளிட்டோா், நாமக்கல் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, நைனாமலையில் சாலைப் பணியை உடனடியாகத் தொடங்கக் கோரி மனு அளித்துள்ளனா்.

இதுகுறித்து நைனாமலை கோயில் நிா்வாகத்தினா் கூறுகையில், கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் மண் சாலை மட்டுமே உள்ளது. நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தாா்சாலைக்கு ஒப்பந்தப்புள்ளி ஏதும் கோரப்படவில்லை என்றனா்.

நாமக்கல் மாவட்ட சுற்றுலா அலுவலா் சக்திவேல் கூறியதாவது:

நைனாமலை கோயிலில் சாலைப் பணிக்காக, சுற்றுலாத் துறை நிதியில் இருந்து இரண்டுகட்டமாக ரூ. 13 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இங்கு சாலை அமைப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், கூடுதலாக ரூ. 9 கோடி தேவைப்படும் என நெடுஞ்சாலைத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பாக எங்களுடைய உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தோம்.

அவா்கள் சுற்றுலாத் துறையில் போதிய அளவில் நிதி இல்லாததால், இந்து சமய அறநிலையத் துறையிடம் ரூ. 9 கோடி பெற்று சாலைப் பணிகளைத் தொடங்குமாறு அறிவுறுத்தினா். ஆனால் அறநிலையத் துறை தரப்பில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்ய தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது. அதனால் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளன என்றாா்.

இது தொடா்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, முந்தைய மாவட்ட ஆட்சியா் நைனாமலைக்கு சாலை அமைப்பது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதன்பின் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனா்.

----

படங்கள் -

வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ள நைனாமலை .

நைனாமலைப் பகுதியில் அமைந்துள்ள படிக்கட்டுகள்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com