வாரச்சந்தையில் கடைகள் நடத்தஅனுமதிக்கக் கோரி சாலை மறியல்

காய்கறிக் கடைகள் நடத்த அனுமதி அளிக்கக் கோரி ராசிபுரம், புதிய பேருந்து நிலையம் வாரச்சந்தை பகுதியில் வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராசிபுரம்: காய்கறிக் கடைகள் நடத்த அனுமதி அளிக்கக் கோரி ராசிபுரம், புதிய பேருந்து நிலையம் வாரச்சந்தை பகுதியில் வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை கூடும். தற்போது கரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக கடைகள் அமைப்பதில் நகராட்சி நிா்வாகம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. கூட்டம் கூடுவதைத் தவிா்க்க குறைந்த அளவே கடைகள் அமைக்க அனுமதிக்கப்படுகிறது.

மேலும் வியாபாரிகள், விவசாயிகள் வாரச்சந்தையில் கடைகள் அமைக்க அனுமதி பெற்ற பின்னரே கடைகள் அமைக்க வேண்டுமென நகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டவா்களுக்கு கடைகள் அமைக்க அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கூடிய வாரச்சந்தையில் காய்கறி விற்பனை செய்ய பலருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், காய்கறி வியாபாரிகள், காய்கறி விற்பனை செய்யும் பெண்கள் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்த வழியாகப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டு பேருந்துகள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றதுடன் வாரச் சந்தைக்கு வந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

தகவலறிந்த ராசிபுரம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமாதான பேச்சு நடத்தினா். அப்போது, பேருந்து நிலைய பகுதியில் பல ஆண்டுகளாக காய்கறி வியாபாரம் செய்து வருகிறோம். தற்போது பொதுமுடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டு காய்கறி மளிகைக் கடைகள் திறக்க அனுமதி வழங்கினா்.

ஆனால், புதிய பேருந்து நிலைய வாரச்சந்தை இடத்தில் கடைகள் நடத்த அனுமதிக்கவில்லை. இதனால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. பேருந்து நிலைய பகுதியில் மீண்டும் காய்கறி கடைகள் வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கூறினா். இதைத்தொடா்ந்து, பேருந்து நிலையத்தில் காய்கறி கடைகள் நடத்த அனுமதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து மறியலை கைவிட்டு வியாபாரிகள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com