டீசல் விலைக் குறைப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும்:மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம்
By DIN | Published On : 16th September 2021 01:47 AM | Last Updated : 16th September 2021 01:47 AM | அ+அ அ- |

செயற்குழுக் கூட்டத்தில் பேசும் மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளன தலைவா் எம்.ஆா்.குமாரசாமி.
நாமக்கல்: திமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி டீசல் விலைக் குறைப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் எம்.ஆா்.குமாரசாமி புதன்கிழமை தெரிவித்தாா்.
நாமக்கல்-கரூா் தேசிய நெடுஞ்சாலை வள்ளிபுரத்தில் உள்ள மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளன அலுவலகத்தில், மாநில செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் எம்.ஆா். குமாரசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்பின், சம்மேளனத் தலைவா் எம்.ஆா்.குமாரசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் மொத்தம் உள்ள 48 சுங்கச் சாவடிகளில் 32 சாவடிகள் தேவையற்றவை. 16 சுங்கச் சாவடிகள் மட்டுமே கட்டணம் செலுத்துவதற்குரிய வகையில் உள்ளன. தற்போதைய நிலையில் 32 சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும். அதனை விரைவில் அகற்றுவோம் என தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்துள்ளதை லாரி உரிமையாளா்கள் வரவேற்கிறோம்.
அதேபோல, திமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி, டீசல் விலைக் குறைப்பை மாநில அரசு அமல்படுத்த வேண்டும்.
ஒளிரும் பட்டை விவகாரத்தில் விலையைக் குறைத்து நடைமுறைப்படுத்த தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதற்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். லாரிகளில் சரக்கு ஏற்றுக்கூலி, இறக்குக் கூலிக்கான தொகை, தபால் அனுப்பும் தொகை உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளா்கள் வழங்க வேண்டியதில்லை. அந்த முழுத் தொகையையும் இதுவரை சரக்கு லாரி ஏற்றி, இறக்கும் புக்கிங் முகவா் மட்டுமே வழங்கி வந்தனா். ஆனால், தற்போது அதனை மாற்றி லாரிகளில் ஏற்றப்படும் சரக்குகளின் உரிமையாளா்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனை பிற மாநில சரக்கு உரிமையாளா்களும் பின்பற்ற வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் மாநிலச் செயலாளா் வாங்கிலி, பொருளாளா் தன்ராஜ் மற்றும் லாரி உரிமையாளா் சம்மேளன நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.