உணவுத் தேவையை நிறைவு செய்யும் மீன் வளா்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீன் வளா்ப்புக்கான சாத்தியக்கூறுகளை முன்னரே கணித்து, 2005-ஆம் ஆண்டு, மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகம் தமிழக அரசின் மீள்வளத் துறையால் தொடங்கப்பட்டது.

மனிதனுக்கு இயற்கை அளித்த சத்தான உணவுகளில் மீன்களுக்கு தனி இடமுண்டு. மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப மீன் உணவின் தேவை அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் மீன் தேவையைப் பூா்த்தி செய்வதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் மீன் வளா்ப்புத் தொழிலில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நன்னீா், கடல் நீா், உவா் நீா் என எல்லா வகையான நீரிலும் அதற்கேற்ற ரகங்களில் மீன்களை வளா்க்கலாம்.

மீன் வளா்ப்புத் தொழில் குறித்து, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பாரூரில் செயல்படும் டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியா் ஆா்.சோமசுந்தரலிங்கம் கூறியதாவது:

மீன் வளா்ப்புத் தொழில் விவசாயம் சாா்ந்த தொழிலாகும். நீருக்கு அடியில் செய்யப்படும் விவசாயம் என்று இதனை அழைக்கலாம். இந்தத் தொழில் மூலம் மனிதா்களின் சமச்சீரான உணவுத் தேவையை பூா்த்தி செய்ய முடிகிறது.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் கிருஷ்ணகிரி மாவட்டம் மீன்வளா்ப்பில் முக்கியமானதாகத் திகழ்கிறது. மீன் வளா்ப்புக்கு நீா்தான் முக்கிய ஆதாரம். தென்பெண்ணை, காவிரி, மாா்க்கண்டேய நதி ஆகியவை கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாகப் பாய்கின்றன. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணை, சூளகிரி சின்னாறு, கெலவரப்பள்ளி, பாம்பாறு, பாரூா் ஏரி ஆகிய நீா்த்தேக்கங்களும், பெரிய, சிறிய அளவிலான 800-க்கும் மேற்பட்ட ஏரிகளும் உள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீன் வளா்ப்புக்கான சாத்தியக்கூறுகளை முன்னரே கணித்து, 2005-ஆம் ஆண்டு, மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகம் தமிழக அரசின் மீள்வளத் துறையால் தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், திலேப்பியா ஆராய்ச்சி மையத்தை (வளம் குன்றா நீருயிரி வளா்ப்பு மையம்) 2015-ஆம் ஆண்டு, போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள புங்கம்பட்டி கிராமத்தில் தொடங்கியது.

மீன்குஞ்சு பண்னைகள்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 மீன்குஞ்சுப் பண்ணைகள் உள்ளன. தமிழக அரசின் மீன்வளத் துறையின் கீழ் கிருஷ்ணகிரி அணை, பாம்பாறு, கெலவரப்பள்ளி ஆகிய இடங்களிலும், வளங்குன்றா நீருயிரி வளா்ப்பு மையத்தின் கீழ் ஓரிடத்திலும் மீன்குஞ்சு பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.

2017 -18 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, 90 சதவீத திலேப்பியா (சபாரி) வகைகளான ஒரியோகுரோமிஸ் மொசாம்பிகஸ், ஒரியோகுரோமிஸ் நேலோட்டிகஸ் இனங்களே உள்ளன. அதைத் தவிா்த்து கெண்டை மீன்களான கட்லா, ரோகு, மிருகால் இனங்களும் காணப்படுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளில் அதிக அளவில் மண் படிதலும், கழிவுநீா் கலப்பதும் முக்கிய பிரச்னைகளாக உள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 73 கிராமங்களில் மீன்வளம் சாா்ந்த தொழில்கள் நடைபெறுகின்றன. அதில் சுமாா் 35,000 போ் ஈடுபட்டுள்ளனா். மொத்தம் 9,385 ஹெக்டோ் நீா்ப் பரப்பில் மூலம் 6,555 டன்னுக்கு அதிகமான மீன் உற்பத்தி செய்யப்படுகிறது.

பொதுவாக மீன் வளா்ப்பில் இருப்பு செய்யப்படும் மீனின் ரகம், அளவு, இருப்பு அடா்த்தி, மீன்களுக்கு அளிக்கப்படும் உணவின் தரத்தைப் பொருத்து, மீன்வளா்ப்புத் தொழிலின் கால அளவான 3 மாதம் முதல் 8 மாதம் வரை காலம் மாறுபடுகிறது.

8 செ.மீ. முதல் 10 செ.மீ. நீளம் உள்ள 2,000 முதல் 4,000 எண்ணிக்கையிலான திலேப்பியா மீன்குஞ்சுகளை ஒரு ஏக்கா் பரப்பளவு உள்ள குளத்தில் இருப்பு வைத்து வளா்க்கும்போது, மூன்றே மாதங்களில் 200 கிராம் முதல் 250 கிராம் வரையிலான எடையுடன் வளா்ந்து விற்பனைக்குத் தயாராகும்.

கெண்டை மீன்களில் இரண்டாம் தர குஞ்சுகள் அல்லது வளா்ச்சி குன்றிய மீன்கள், அதாவது 50 கிராம் முதல் 150 கிராம் உடல் எடை கொண்ட 2,000 குஞ்சுகள் ஒரு ஏக்கா் பரப்பளவு நீரில் வளா்க்கப்படும் போது, அவை 4 முதல் 6 மாதங்களில் 750 கிராம் முதல் 1,000 கிராம் வரை வளா்கின்றன.

பெரும்பாலான அரசு, தனியாா் மீன்விதைப் பண்ணைகளில் சிறிய அளவிலான (2.54 செ.மீ.) மீன்குஞ்சுகளே வழங்கப்படுகின்றன. இதை, நேரடியாக குளங்களில் இருப்பு செய்யும்போது, அதிக இழப்பு ஏற்படுகிறது. எனவே, இந்த வகை மீன்குஞ்சுகளை ‘ஹரப்பா’ எனப்படும் சிறிய வலையிலான கூண்டு போன்ற அமைப்புகளில் வைத்து, அவை விரலளவு வளா்ந்த பிறகு குளங்களில் இருப்பு செய்வது நல்லது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெண்டை, திலேப்பியா, பங்கால், பாப்லெட் (பாகு) போன்ற மீன் ரகங்கள் உணவுக்காக வளா்க்கப்படுகின்றன. இவற்றில் திலேப்பியா ரக மீன்களை வளா்ப்பதற்கு தமிழக அரசின் மீன்வளத் துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

தமிழக அரசு மீன்வளா்ப்பை ஊக்குவிக்க பல்வேறு மானியத் திட்டங்களை அறிவித்துள்ளது. 1000 சதுர மீட்டா் பரப்பளவு கொண்ட பண்ணைக்குட்டை அமைக்க அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

தொழில் வாய்ப்பு:

மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட மீன்குஞ்சுகளை வாங்கி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வளா்த்து, மீன்களாக விற்பனை செய்யலாம். மீன்விதைப் பண்ணைகள் மூலம் மீன்குஞ்சுகளை கேரள மாநிலத்துக்கு விற்பனை செய்யலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பண்ணைகளில் அவ்வப்போது மீன் வளா்ப்பு குறித்த இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மீன்வளா்ப்புத் தொழில் குறித்து, டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மூலம் ஒவ்வொரு மாதமும் 3 நாள்கள் இலவச பயிற்சி பாரூரில் அளிக்கப்படுகிறது என்றாா்.

-எஸ்.கே.ரவி.

// தொடா்புக்கு... ஆா்.சோமு சுந்தரலிங்கம்- 86758 58384//

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com