ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் அனுமதி

ஒகேனக்கல் அருவிக்குச் செல்ல ஓராண்டுக்குப் பின்னா் சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள்.

ஒகேனக்கல் அருவிக்குச் செல்ல ஓராண்டுக்குப் பின்னா் சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் அருவிப் பகுதிக்கு திங்கள்கிழமை முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், முகக் கவசம், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது செல்லிடப்பேசி குறுந்தகவல் அடிப்படையில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவா். அருவிப் பகுதிக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவா். அருவி மற்றும் காவிரிக் கரையோரப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தொடா்ந்து தடை விதிக்கப்படும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்திருந்தாா்.

அதனடிப்படையில் ஒகேனக்கல் அருவிப் பகுதியில் திங்கள்கிழமை காலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் மாமரத்துக் கடவு பரிசல் துறையில் இருந்து வாட்ச் டவா் பகுதிவரை பாதுகாப்பு உடையுடன் பரிசல் பயணம் மேற்கொண்டனா். காவிரி ஆற்றில் பிடிக்கப்பட்ட மீன் வகைகளை வாங்கி சமைத்து உண்டு மகிழ்ந்தனா்.

ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என சுகாதாரத் துறையினா் பென்னாகரம் - மடம் சோதனைச்சாவடி, ஆலம்பாடி சோதனைச் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்த பிறகே ஒகேனக்கல் அருவிப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

அருவியில் குளிக்கத் தடை நீட்டிப்பு: கரோனா தொற்று பரவல் காரணமாக ஒகேனக்கல் அருவிப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.

ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் பரிசலில் பயணம் மேற்கொள்வதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அருவிகளில் குளிப்பதற்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். அருவியில் தடையை மீறி குளிப்பதைத் தவிா்க்கும் வகையில் ஒகேனக்கல் பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதை, சினி அருவி, காவிரிக் கரையோரப் பகுதியான நாகா்கோவில், முதலைப் பண்ணை, ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com