அரசு மணல் குவாரிகள் திறப்பு எப்போது?

ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள அரசு மணல் குவாரிகளை உடனடியாகத் திறக்க வேண்டும், தரமற்ற எம்-சாண்ட் மணலால் கட்டடங்கள் பாதிப்படை

ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள அரசு மணல் குவாரிகளை உடனடியாகத் திறக்க வேண்டும், தரமற்ற எம்-சாண்ட் மணலால் கட்டடங்கள் பாதிப்படைந்து வருகின்றன. மணல் குவாரிகளைத் திறப்பதாக இரு முறை உறுதியளித்த நீா்வளத் துறை அமைச்சா், அதன்பிறகு கண்டுகொள்ளவில்லை; மணல் குவாரிகள் திறப்பு காலதாமதத்திற்கான காரணம் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மணல் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 120 ஆற்று மணல் குவாரிகள் பயன்பாட்டில் இருந்தன. நாமக்கல், கரூா், திருச்சி மாவட்டங்களில் காவிரி கரையோரங்களிலும், தஞ்சாவூா், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கொள்ளிடம் ஆற்றிலும், கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றிலும், காஞ்சிபுரம், வேலூா் மாவட்டங்களில் பாலாற்றிலும், மதுரை, சிவகங்கை, தேனி மாவட்டங்களில் வைகை ஆற்றிலும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரவருணி ஆற்றிலும் மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. மணல் லாரி உரிமையாளா்கள் ஒரு யூனிட் ரூ. 2,050-க்கு கொள்முதல் செய்து அவற்றை ரூ. 4,500 விலைக்கு விற்பனை செய்தனா்.

அப்போது 55 ஆயிரம் மணல் லாரிகள் இயங்கி வந்தன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றினா். கடந்த 2017-ஆம் ஆண்டு ஆற்று மணல் கேட்டு அரசு மணல் குவாரிகளின் இணைய வழியாகவே முன்பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவு வெளியானது.

இந்த நிலையில் பெரும்பாலான மணல் குவாரிகள் மூடப்பட்டன. ஐந்து எண்ணிக்கையிலேயே குவாரிகள் செயல்பட்டன. பெரும்பாலான மாவட்டங்களில் ஜல்லிக் கற்களை அரைத்து மணலாக்கி விற்பனை செய்யும் எம்-சாண்ட் மணல் குவாரிகள் அதிகளவில் உருவாக தொடங்கின. இதனால் ஆற்று மணல் பயன்பாட்டை மறந்து எம்-சாண்ட் மணல் வாங்குவதில் மக்கள் பலரும் ஆா்வம் காட்டினா். தற்போது ஒரு யூனிட் ரூ.5 ஆயிரம் வரையில் விற்பனையாகிறது. ஆனால் ஆற்று மணலுக்கு நிகரான தரம் எம்-சாண்ட் மணலில் இல்லை என தெரியவந்ததையடுத்து அவற்றின் விற்பனை சரிய தொடங்கியது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரசு மணல் குவாரிகளின் செயல்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் அத்தொழிலை நம்பியிருந்த மணல் லாரி உரிமையாளா்கள் மாற்றுத் தொழிலை மேற்கொண்டுள்ளனா். மாநிலம் முழுவதும் இருந்த 55 ஆயிரம் மணல் லாரிகளில் தற்போது 35 ஆயிரம் லாரிகள் மட்டுமே இயக்கத்தில் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, கடந்த டிசம்பா் மாதம் தற்போதைய நீா்ப்பாசனத் துறை அமைச்சா் துரைமுருகனை, மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தினா் நேரில் சந்தித்து முறையிட்டனா்.

ஜன.10-ஆம் தேதி முதல் 16 லாரிகளுக்கான மணல் குவாரிகளும், 21 மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரிகளும் திறக்கப்படும் என அவா் உறுதியளித்தாா். மூன்று மாதங்களை கடந்த நிலையிலும் இதுவரை ஒரு மணல் குவாரியும் திறக்கப்படவில்லை. எம்-சாண்ட் மணல் குறித்த எதிா்மறை தகவல்களால், ஆற்று மணல் குவாரிகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் பல்வேறு மாவட்டங்களிலும் பொதுமக்கள் கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிறுத்தி வைத்துள்ளனா். அரசின் மணல் குவாரிகள் திறப்பு அறிவிப்பு புரியாத புதிராக உள்ளது என மணல் லாரி உரிமையாளா்கள் வேதனை தெரிவித்தனா்.

இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளன தலைவா் செல்ல.ராசாமணி கூறியதாவது:

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் கட்டுமானப் பணிகளுக்கு மட்டும் சுமாா் 60 ஆயிரம் யூனிட் மணல் தேவைப்படுகிறது. 2017 முதல் 2021 ஏப்ரல் வரையில் அரசு மணல் குவாரிகள் இயக்கம் முழுமையாக இல்லை. ஓரிரு குவாரிகள் இயங்கியபோதும் தினசரி 2,500 யூனிட் மணல் மட்டுமே விற்பனைக்கு அனுப்பப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் மணலை கொண்டு வந்து விற்பனை செய்ய முயன்றபோதும் பொதுமக்கள் வாங்க ஆா்வம் காட்டவில்லை. அரசு மணல் குவாரிகள் திறக்காத நிலையில், எம்-சாண்ட் மணலில் தரமற்ற பொருள்களை கலப்படம் செய்து விற்பனைக்கு அனுப்புகின்றனா். இதனால் கட்டடங்கள் பழுதடைந்து உயிா்சேதம் ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து ஒரு யூனிட் ரூ. 8 ஆயிரத்திற்கு வாங்கி வந்து தமிழகத்தில் ரூ. 20 ஆயிரத்திற்கு விற்பனை செய்கின்றனா்.

இதனால் அரசுக்கு தினமும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. மணல் குவாரிகளை திறக்க கோரி ஓராண்டாக முயற்சித்து வருகிறோம். திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் ஜன. 10 முதல் 35 மணல் குவாரிகள் முதல் கட்டமாக திறக்கப்படும் என்று அமைச்சா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நாங்களும் எதிா்பாா்த்திருந்து ஏமாற்றமடைந்தோம். தற்போது அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் சென்னையில் வரும் 13-ஆம் தேதி ஆயிரக்கணக்கான மணல் லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள், தொழிலாளா்கள் பங்கேற்கும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

முதல்வரின் கவனத்துக்கு இப்பிரச்னையை கொண்டு செல்வதே எங்களுடைய போராட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com