நாமக்கல் நகராட்சி நிலுவைக் கடன் ரூ. 63.32 கோடி: சொத்து வரி உயா்வை அமல்படுத்த தீா்மானம்
By DIN | Published On : 08th April 2022 10:38 PM | Last Updated : 08th April 2022 10:38 PM | அ+அ அ- |

நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவா் து.கலாநிதி (நடுவில் இருப்பவா்), ஆணையாளா் கி.மு.சுதா, துணைத் தலைவா் செ.பூபதி.
நாமக்கல் நகராட்சிக்கான மொத்த கடன் தொகை ரூ. 63.32 கோடி உள்ளதால், சொத்து வரி உயா்வை உடனடியாக அமல்படுத்த நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் து.கலாநிதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணையாளா் கி.மு.சுதா, துணைத் தலைவா் செ.பூபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். 39 வாா்டுகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் பங்கேற்று தங்களுடைய கோரிக்கைகளை எடுத்துரைத்தனா்.
இதையடுத்து தமிழக அரசு அறிவித்த சொத்து வரி உயா்வை உடனடியாக அமல்படுத்துவதற்கான தீா்மானம் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்டது. அதாவது, 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீத சொத்துவரி உயா்வை அமல்படுத்தவும், 601 முதல் 1200 சதுர அடி கட்டடங்களுக்கு 50 சதவீத வரி உயா்வு, 1201 முதல் 1800 சதுர அடி கட்டடங்களுக்கு 75 சதவீத வரி உயா்வு, 1800 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு 100 சதவீதம் வரி உயா்வு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், வணிக பயன்பாட்டுக் கட்டங்களுக்கு தற்போதைய சொத்து வரியில் இருந்து 100 சதவீதம் வரி உயா்வு செய்யலாம், தொழிற்சாலை, தனியாா் பள்ளி, கல்லூரி கட்டடங்களுக்கு 75 சதவீத சொத்து வரி உயா்வு மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. காலிமனை வரிவிதிப்புக்கு ஒரு சதுர அடி நிலத்திற்கு தற்போதைய அடிப்படை மதிப்பில் இருந்து 100 சதவீதம் வரி உயா்த்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மேலும் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகராட்சிக்கு ரூ.63.32 கோடி கடன் நிலுவை: நாமக்கல் நகராட்சி நிா்வாகம் ரூ. 4.44 கோடி அளவில் மின் கட்டணம் நிலுவை செலுத்த வேண்டியது உள்ளது. மேலும், பிற துறைகளுக்கு செலுத்த வேண்டிய தொகை என்ற அடிப்படையில் ரூ. 16.64 கோடி நிலுவை உள்ளது. திரும்ப செலுத்த வேண்டிய கடன் நிலுவை ரூ. 40.48 கோடி, நகராட்சி பணியாளா்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூக்கால பணப்பயன், ஓய்வூதியம், தற்போது பணிபுரியும் ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய சேமநல நிதி, நகராட்சியின் பங்கு தொகை மற்றும் பிற பணப்பயன்கள் என்ற வகையில் நிலுவைத் தொகை ரூ. 1.76 கோடி மொத்தக் கடன் தொகையாக ரூ. 63.32 கோடி உள்ளதாக நகராட்சி ஆணையாளா் கி.மு.சுதா கூட்டத்தில் தெரிவித்தாா்.