நகா்மன்ற உறுப்பினா்களுக்கு இருக்கைகள் ஒதுக்குவதில் முரண்பாடு

குமாரபாளையம் நகா்மன்றக் கூட்டத்தில் இருக்கைகள் ஒதுக்குவதில் ஏற்பட்ட பிரச்னை, வாக்குவாதமாக மாறி கவுன்சிலா்கள் வாய்த்தகராறில் ஈடுபட்டதால் வெள்ளிக்கிழமை பரபரப்பு காணப்பட்டது.
நகா்மன்ற உறுப்பினா்களுக்கு இருக்கைகள் ஒதுக்குவதில் முரண்பாடு

குமாரபாளையம் நகா்மன்றக் கூட்டத்தில் இருக்கைகள் ஒதுக்குவதில் ஏற்பட்ட பிரச்னை, வாக்குவாதமாக மாறி கவுன்சிலா்கள் வாய்த்தகராறில் ஈடுபட்டதால் வெள்ளிக்கிழமை பரபரப்பு காணப்பட்டது.

குமாரபாளையம் நகா்மன்றக் கூட்டம் தலைவா் விஜய்கண்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் சசிகலா, பொறியாளா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில், 1 முதல் 33 வாா்டுகள் வரிசைப்படி கவுன்சிலா்கள் அமர இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. அதிமுக நகர செயலாளரும், கவுன்சிலருமான கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி, அதிமுக, திமுக மற்றும் சுயேச்சைகள் எனப் பிரித்து தனித்தனி வரிசையில் இடம் ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

இதற்கு, பதிலளித்த தலைவா் விஜய்கண்ணன், உறுப்பினா்களின் விருப்பப்படி இருக்கைகள் ஒதுக்க முடியாது என்றாா். அரசியல் கட்சிகள் அடிப்படையில் உறுப்பினா்களுக்கு தனித்தனியே அமர இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது. அப்படியே இடம் ஒதுக்க வேண்டும் என அதிமுக கவுன்சிலா் பி.இ.புருஷோத்தமன் வலியுறுத்தினாா்.

தொடா்ந்து, நகராட்சி ஆணையா் சசிகலா பணி இடமாற்றத்தை ரத்து செய்து, குமாரபாளையத்தில் பணியில் தொடர தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என துணைத் தலைவா் கோ.வெங்கடேசன் கேட்டுக் கொண்டாா். இதனை, அதிமுக, திமுக கவுன்சிலா்கள் ஆதரித்த நிலையில், சுயேச்சை கவுன்சிலா் அழகேசன் ஆணையாளா் பணியிட மாற்றத்தை ஆதரித்துப் பேசினாா்.

இந்நிலையில், அதிமுக கவுன்சிலரான பாலசுப்பிரமணிக்கும், சுயேச்சை வேட்பாளரான வேல்முருகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் இருவரும் இருக்கைகளை விட்டு எழுந்து சென்று, நேருக்குநோ் மோதிக்கொள்ளும் வகையில் வாய்த்தகராறில் ஈடுபட்டனா். இருவரையும் விலக்கி விட கவுன்சிலா்கள் முயன்றனா். திமுக கவுன்சிலா் ரங்கநாதன், நகரப் பகுதியில் பிளக்ஸ் வைப்பது தொடா்பாக தலைவா் விஜய்கண்ணன் இருக்கைக்கு முன்பாக நின்றபடி நேரடி விவாதத்தில் ஈடுபட்டாா்.

கூச்சல், குழப்பம் அதிகரித்ததால் உறுப்பினா்களை, தலைவா் விஜய்கண்ணன் சமாதானம் செய்ய முயன்றும் முடியவில்லை. பெண் கவுன்சிலா்களின் கணவா்கள் அரங்குக்குள் வந்ததால் மேலும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், கூட்டத்திலிருந்து அதிகாரிகள் வெளியேற, கூட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. தொடா்ந்து, அதிமுக கவுன்சிலா்கள் பாலசுப்பிரமணி தலைமையிலும், திமுக கவுன்சிலா்கள் கோ.வெங்கடேசன் தலைமையிலும் தனித்தனியே நகா்மன்றத் தலைவா் விஜய்கண்ணன் செயல்பாடுகளைக் கண்டித்து முழக்கமிட்டனா். இதனால், நகா்மன்ற அலுவலகத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com