ராசிபுரம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தி அறிவிப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி

ராசிபுரம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தி அறிவிப்பு செய்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு ராசிபுரம் சுற்று வட்டார மக்கள் மகிழ்ச்சியும், தமிழக அரசுக்கு பாராட்டும் தெரிவித்து

ராசிபுரம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தி அறிவிப்பு செய்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு ராசிபுரம் சுற்று வட்டார மக்கள் மகிழ்ச்சியும், தமிழக அரசுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனா்.

ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையை நகராட்சி பகுதியின் பொதுமக்கள் மட்டுமின்றி இதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புற பகுதிகளைச் சோ்ந்த ஏழைகள், விவசாய தொழிலாளா்கள், விசைத்தறி தொழிலாளா்கள் என சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயன்படுத்தி வருகின்றனா். இம்மருத்துவமனை சுமாா் 140 படுக்கை வசதிகளைக் கொண்டது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் 900 போ் வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனா்.

நிதி ஒதுக்கீடு: நாமக்கல் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வந்த நிலையில், நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டதால், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக நாமக்கல் மருத்துவமனை உயா்த்தப்பட்டது. இதனையடுத்து, மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தாலுகா மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனையடுத்து ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தும் வகையில் மருத்துவ குழுவினரால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இடம் தோ்வு: மருத்துவமனையில் வசதிகள், கிராமப்புற, மலைவாழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டும் ராசிபுரம் மருத்ததுவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தலாம் என மருத்துவமனையின் ஆய்வு குழு அரசுக்கு பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில் அணைப்பாளையம் பகுதியில் சுமாா் 5 ஏக்கா் மதிப்பில் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு ராசிபுரம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தி சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்ட 19 மருத்துவமனைகளில் ராசிபுரம் மருத்துவமனையும் ஒன்றாகும்.

தமிழக அரசின் இந்த உத்தரவால் ராசிபுரம் அரசு மருத்துவமனை கூடுதலாக பல்வேறு வசதிகள் படுக்கை வசதிகள் பெறும். உள்ளுறை மருத்துவா், மருத்துவமனைக் கண்காணிப்பாளா், புதிய கட்டடங்கள், அனைத்து துறை ஆய்வகங்கள், பல்துறை சிறப்பு மருத்துவா்கள், சிடி ஸ்கேன், அறுவை அரங்குகள் போன்ற கூடுதல் வசதிகளைப் பெறும். இதனால் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த கிராமப்புற மக்கள் மட்டுமின்றி, கொல்லிமலை, போதமலை பகுதிகளைச் சோ்ந்த மலைவாழ் மக்களும் பெரிதும் பயன்பெறுவா். இது குறித்து இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com