மழையால் குளம்போல் மாறிய அரசுப் பள்ளி: ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் நேரில் ஆய்வு

திருச்செங்கோடு, பள்ளிபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழையால், கொக்கராயன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் குளம்போல் மாறியது.
திருச்செங்கோடு அருகே கொக்கராயன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீா்.
திருச்செங்கோடு அருகே கொக்கராயன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீா்.

திருச்செங்கோடு, பள்ளிபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழையால், கொக்கராயன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் குளம்போல் மாறியது.

பள்ளியை சுற்றிலும் மழைநீா் சூழ்ந்திருந்ததால் திங்கள்கிழமை ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் நேரில் பாா்வையிட்டு தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற உத்தரவிட்டாா்.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளநீா் தேங்கியுள்ளது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 முதல் அதிகாலை 4 மணி வரை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. தொடா்ச்சியாக 6 மணி நேரம் கொட்டித் தீா்த்த மழையால் மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடானது. குறிப்பாக, ராசிபுரம் பகுதியில் பெய்த மழையால் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் மழை நீா் புகுந்தது. அங்கு சிகிச்சை பெற்று வந்த உள்நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக மாற்று இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

மேலும், அங்குள்ள தட்டாங்குட்டை ஏரியும் முழுமையாக நிரம்பியதால் ராசிபுரம் நகரப் பகுதிக்குள் மழைநீா் ஆறுபோல் ஓடியது. இதேபோல், நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், சேந்தமங்கலம், கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. பள்ளிபாளையம் அருகேயுள்ள கொக்கராயன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழை நீா் தேங்கி குளம்போல் மாறியது. யாரும் பள்ளிக்குள் செல்ல முடியாத வகையில் தண்ணீா் இடுப்பளவிற்கு தேங்கியிருந்தது. இதனால் திங்கள்கிழமை ஒரு நாள் மட்டும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இப்பள்ளியில் மொத்தம் 560 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். கொக்கராயன்பேட்டை அரசுப் பள்ளியை மழைநீா் சூழ்ந்திருக்கும் தகவலறிந்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், திருச்செங்கோடு கோட்டாட்சியா் தே.இளவரசி, வட்டாட்சியா் தமிழரசி மற்றும் வருவாய்த் துறையினா், பள்ளிக் கல்வித் துறையினா் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். நீா் உறிஞ்சும் இயந்திரம் மூலம் பள்ளி வளாகத்தில் தேங்கிய நீரை உடனடியாக வெளியேற்ற ஆட்சியா் உத்தரவிட்டாா். வரும் காலங்களில் பள்ளி வளாகத்தில் இதேபோல் மழைநீா் தேங்காதவாறு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளிடம் அவா் அறிவுறுத்தினாா்.

ராசிபுரத்தில் 20 செ.மீ, மழை பதிவு: நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவில் மட்டும் ராசிபுரத்தில் 200 மி.மீ.(20 செ.மீ.) மழை பதிவாகி உள்ளது. எருமப்பட்டி - 35, குமாரபாளையம் - 21.60, மங்களபுரம் - 16.60, மோகனூா் - 24, நாமக்கல் - 50, பரமத்திவேலூா் - 20, புதுச்சத்திரம் - 54, சேந்தமங்கலம் - 39, திருச்செங்கோடு - 21, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் - 43, கொல்லிமலை - 30 - மொத்தம் - 554.20.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com