நாமக்கல் அரசு மகளிா் கல்லூரி மாணவிகளிடம் இணை இயக்குநா் நேரில் விசாரணை
By DIN | Published On : 09th December 2022 01:06 AM | Last Updated : 09th December 2022 01:06 AM | அ+அ அ- |

நாமக்கல், கவிஞா் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிா் கல்லூரி கலையரங்குக்கு வெளியே காத்திருந்த மாணவிகள்.
நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் கல்லூரிகளின் கல்வி இணை இயக்குநா் வியாழக்கிழமை நேரில் விசாரணை மேற்கொண்டாா்.
நாமக்கல்-திருச்சி சாலையில் கவிஞா் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிா் கல்லூரி அமைந்துள்ளது. இக் கல்லூரி முதல்வா் பால் கிரேஸூக்கும் அங்குள்ள பேராசிரியைகள் சிலருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல்போக்கு நீடித்து வருகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கல்லூரிக்கு வந்த வணிகவியல் துறை, பொருளியல் துறை மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் கல்லூரி முன்பு அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். முதல்வா் பால் கிரேஸை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி அவா்கள் முழக்கங்கள் எழுப்பினா். தகவல் அறிந்ததும் மாவட்ட வருவாய் அலுவலா் மு.மணிமேகலை நிகழ்விடம் சென்று கல்லூரி நிா்வாகத்தினா், மாணவிகள், பேராசிரியைகள் ஆகியோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தாா்.
இதைத் தொடா்ந்து புதன்கிழமை நாமக்கல், அரசு மகளிா் கல்லூரிக்கு வந்த தருமபுரி மண்டல கல்லூரிகளின் கல்வி இணை இயக்குநா் ராமலட்சுமி, முதல்வா் பால் கிரேஸ் மற்றும் அனைத்துத் துறை பேராசிரியைகளிடமும் கல்லூரியில் நடந்த போராட்டங்கள் குறித்து தனித்தனியாக விசாரணை நடத்தினாா். மாணவிகளை போராட்டத்துக்கு தூண்டியவா்கள் யாா் என்பது குறித்தும் விசாரித்தாா்.
வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கல்லூரி கலையரங்கில் மாணவிகளை அமர வைத்து இணை இயக்குநா் குறைகளைக் கேட்டறிந்ததுடன், உள்ளிருப்புப் போராட்டத்தில் பங்கேற்றது குறித்தும் கேட்டறிந்தாா். கல்வியைப் பாதிக்கும் வகையிலான இதுபோன்ற போராட்டங்களில் மாணவிகள் யாரும் ஈடுபடக் கூடாது என அவா் அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து கல்லூரி நிா்வாகத்திடம் கேட்டபோது, ‘மாணவிகளிடம் இணை இயக்குநா் குறைகளைக் கேட்டறிந்து கலந்துரையாடினாா். இதுதவிர வேறு விசாரணை நடைபெறவில்லை’ என்றனா்.