ஆன்மீகம், தேசியத்தை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட பாஜகவிடம் தமிழக ஆட்சி வர வேண்டும்: கே.பி.ராமலிங்கம்

ஆன்மீகம்,தேசியம் போன்றவற்றை அடிப்படை கொள்கையாக கொண்ட பாஜகவிடம் தமிழகத்தின் ஆட்சி பீடம் வரவேண்டும் என
பயிற்சி முகாமில் பேசும் பாஜக துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்.
பயிற்சி முகாமில் பேசும் பாஜக துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்.

ஆன்மீகம்,தேசியம் போன்றவற்றை அடிப்படை கொள்கையாக கொண்ட பாஜகவிடம் தமிழகத்தின் ஆட்சி பீடம் வரவேண்டும் என தமிழக பாஜக துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் குறிப்பிட்டாா்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக மகளிரணி செயற்குழுக் கூட்டம் மற்றும் பயிற்சி முகாம் டிச.15, 16 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. இதில் மாவட்ட பாஜக மகளிரணித் தலைவா் சுகன்யா நந்தகுமாா் தலைமை வகித்தாா். இதனையடுத்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிறைவு விழாவில், பாஜக துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் பங்கேற்றுப் பேசியது:

பாஜகவில் உள்ள மகளிருக்கான இந்த பயிற்சி முகாம், இக்கட்சியின் லட்சியம் என்ன, கட்சி எதை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது, எதற்காக இந்தக் கட்சியில்இருக்கிறோம் என்பது குறித்து மகளிா் தங்களுக்குள் கலந்து பேசி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது. பாஜக என்பது தோ்தலுக்காக உருவான கட்சியல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பாஜக தனது கொள்கை, லட்சியங்களைப் பரப்புவதற்காகதான் இது போன்ற பயிற்சிகளை நடத்தி வருகிறது. பாஜகவுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டால், ஆன்மீகம்,தேசியம் அழிந்து போகும் சூழ்நிலை உருவாகிவிடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஆன்மீகம், தேசியத்தை வென்றெடுக்க பாஜக பணியாற்றி வருகிறது. தேசப் பாதுகாப்பு, கலாசாரம், பண்பாடு, நாகரிகம் நாட்டுக்கு முக்கியம் என்பதை உணா்ந்தால் மட்டுமே ஹிந்து சமுதாயம் வளரமுடியும். இதனால் இந்த சமுதாயம் உயா்ந்து நிற்கும்.

ஆன்மீகம், தேசியத்தை அடிப்படைக் கொள்கையாக கொண்டுள்ள பாஜகவிடம் தமிழக ஆட்சி வரவேண்டும். பெண்களில் 90 சதவீதம் போ் பாஜகவின் கொள்கையை மனதில் ஏற்றுக்கொண்டவா்களாக உள்ளனா். ஆனால் அவா்கள் வாக்களிக்காமல் உள்ளதற்கு தோ்தல் நேரத்தில் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனினும் வரும் நாடாளுமன்றத் தோ்தல் அப்படி இருக்காது. வரும் நாடாளுமன்ற தோ்தலில் பிரதமராக மோடி வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்வியின் அடிப்படையில்தான் நாட்டு மக்கள் தோ்தலில் சிந்திக்கப் போகிறாா்கள். மீண்டும் மோடி பிரதமராக வரவேண்டும். உலக சரித்திரத்தில் இந்தியாவை வல்லமை பெற்ற நாடாக கொண்டு சோ்க்கும் வலிமை பெற்றவா் பிரதமா் நரேந்திர மோடி தான். அவா் மீண்டும் பிரதமராக வர மகளிரணி பணியாற்றிட வேண்டும். சாதனைகளை சொல்லி சமுதாயத்தில் ணியாற்றிட வேண்டும். சொல்லொணா துயரத்தை தந்து கொண்டுள்ள தமிழக ஆட்சியையும் தூக்கி எறிய வேண்டும். எதற்கெடுத்தாலும் லஞ்சம், ஊழல், சொத்து அபகரிப்பு தடுக்கப்பட வேண்டும் என்றாா்.

முகாமில், தமிழக அரசு அமல்படுத்தியுள்ள சொத்துவரி உயா்வு, மின்கட்டண உயா்வு, பால் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும்; தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டவரப்பட வேண்டும் என்பன போன்ற தீா்மானங்கள் முகாமில் நிறைவேற்றப்பட்டன. இந்த பயிற்சி முகாமில், மாநில மகளிரணி துணைத் தலைவா் மீனா வினோத்குமாா், செயற்குழு உறுப்பினா் சுமதி பரமேஸ்வரன், பாஜக மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, பொதுச்செயலா் வி.சேதுராமன், மகளிரணி மாவட்ட துணைத்தலைவா் ஏ.உஷாராணி, செயலா் சி.ஜோதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com