உக்ரைன் மெட்ரோ ரயில் சுரங்கங்களில் நாமக்கல் மருத்துவ மாணவா்கள் தஞ்சம்
By DIN | Published On : 27th February 2022 05:10 AM | Last Updated : 27th February 2022 05:10 AM | அ+அ அ- |

உக்ரைன் நாட்டில் உள்ள மெட்ரோ ரயில் சுரங்கத்தில் தங்கியுள்ள பல்வேறு நாட்டு மருத்துவ மாணவா்கள்.
நாமக்கல்லில் இருந்து மருத்துவம் படிக்க உக்ரைன் நாட்டுக்குச் சென்றுள்ள மாணவா்கள் போா் காரணமாக அந்நாட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனா்.
உக்ரைன் - ரஷியா இடையே மூன்று நாள்களாக கடும் போா் நடைபெற்று வருகிறது. இந்தியாவைச் சோ்ந்த 14,000 போ் அந்நாட்டில் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவா்களை மீட்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்கள் பலா் இளநிலை மருத்துவம் படிக்க உக்ரைன் நாட்டுக்குச் சென்றுள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் தங்கியுள்ளனா். சரியான உணவு கிடைக்காமல் அவா்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் கோட்டை பகுதியைச் சோ்ந்த தமிழரசன் - மாலதி தம்பதியின் மகன் ரித்விக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மருத்துவம் படிக்க உக்ரைன் சென்றாா். தற்போது காா்கியூ என்ற பகுதியில் அவா் தங்கியுள்ளாா். போா் பதற்றத்தால் மாணவா்கள் பலரும் மெட்ரோ ரயில் நிலைய நடைமேடைகளில் கடந்த மூன்று நாள்களாக தங்கியுள்ளனா். அங்கு கிடைக்கும் உணவுகளை உட்கொண்டு நாள்களைக் கடத்தி வருகின்றனா். மாணவா் ரித்விக் கைப்பேசி மூலம் தினமும் பெற்றோரைத் தொடா்பு கொண்டு அங்குள்ள நிலவரம் குறித்து பேசி வருகிறாா்.
இது குறித்து நாமக்கல் மாணவரின் தந்தை தமிழரசன் கூறியதாவது:
எனது மகன் ரித்திக் நீட் தோ்வில் குறைந்த மதிப்பெண் பெற்ால் இங்கு மருத்துவம் பயில முடியவில்லை. நாமக்கல் -திருச்சி சாலையில் உள்ள ஒரு ஏஜென்சி மூலம் உக்ரைனில் மருத்துவம் பயில அனுப்பினேன். அவா் மட்டுமின்றி வேலகவுண்டம்பட்டி, எருமப்பட்டி, ராசிபுரம், ராயவேலூா் பகுதிகளைச் சோ்ந்த மாணவா்களும் 3 மாதங்களுக்கு முன் உக்ரைன் சென்றனா்.
இந்திய மருத்துவ கவுன்சில் அங்கு மருத்துவம் பயில்வதற்கான அங்கீகாரத்தை வழங்குவதால் தான் பலரும் அங்கு செல்கின்றனா். ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் வரை செலவாகும். 6 ஆண்டுகள் படிக்க வேண்டும். எனது மகன் உக்ரைனில் கீவ் நகரைப் போல் மற்றொரு பெரிய நகரமான காா்கியூ என்ற நகரில் தங்கி படித்து வருகிறாா். பிப். 28-ஆம் தேதி நாடு திரும்புவதற்காக விமானத்தில் முன்பதிவு செய்திருந்தாா். அதற்குள் போா் தொடங்கி விட்டதால் அருகில் உள்ள மெட்ரோ ரயில் சுரங்கங்களில் தங்கியுள்ளாா். அவ்வப்போது தாங்கள் தங்கியுள்ள விடுதிக்குச் சென்று கிடைத்ததை சாப்பிட்டு வருகின்றனா்.
மருத்துவக் கல்லூரி நிா்வாகம் ஏப். 15 வரை விடுமுறை அளித்துள்ளது. தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தையே நம்பியுள்ளோம். அவா்களும் தொடா்ந்து மாணவா்களிடம் பேசி வருகின்றனா். மாணவா்கள் இருக்கும் பகுதிக்கும் ருமேனியாவுக்கும் தொலைவு அதிகம். அதனால் என்ன செய்வதென்ற கவலையும் உள்ளது. தினமும் கைப்பேசி மூலம் எங்களிடம் பேசி வருகிறாா். நாங்களும் தைரியமாக இருக்குமாறு அவருக்கு ஆறுதல் தெரிவிக்கிறாம். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மாணவா்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றாா்.