நாமக்கல்லில் மாணவா்களுக்கான பள்ளி பரிமாற்றத் திட்டம் அமல்
By DIN | Published On : 27th February 2022 05:11 AM | Last Updated : 27th February 2022 05:11 AM | அ+அ அ- |

நாமக்கல்லில், பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 6,7,8-ஆம் வகுப்பை சோ்ந்த தலா 5 மாணவா்கள் என 15 போ் அரசு நடுநிலைப்பள்ளி வகுரம்பட்டிக்கும், வகுரம்பட்டி பள்ளியில் படிக்கும் 15 மாணவா்கள் அரசு மேல்நிலைப்பள்ளி நாமக்கல் தெற்குக்கும் வெள்ளிக்கிழமை மாறுதல் செய்யப்பட்டனா்.
இத்திட்டத்தால் மாணவா்களின் கற்றல் செயல்பாடு வலுவூட்டம் பெறுவதாக ஆசிரியா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நாமக்கல் தெற்கு பள்ளிக்கு வந்த மாணவா்களை, தலைமை ஆசிரியா் பெரியண்ணன் தலைமையில் ஆசிரியா்கள் வரவேற்றனா். அதன்பிறகு பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் நோக்கம் குறித்து தெளிவாக மாணவா்கள் அனைவருக்கும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், பள்ளியின் சிறந்த செயல்பாடுகள் காணொலி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பள்ளியைச் சுற்றியுள்ள இயற்கை சூழல்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் ஆகியவை பற்றியும் தெரிவிக்கப்பட்டது. பின்னா் இரு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களும் குவி வழி கூட்டம் மூலம் ஒருவருக்கொருவா் தங்களுடைய கருத்துக்களை, அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா். இந்த நிகழ்வில், உதவி தலைமை ஆசிரியை உமாமாதேஸ்வரி, இடைநிலை ஆசிரியா் அருள்குமாா், வகுரம்பட்டி நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை ஜெயா, சுகந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.-