நாமக்கல் அருகே மாடுகள் பூ தாண்டும் விழா: ஏராளமானோர் கண்டுகளிப்பு

நாமக்கல் அருகே பொங்கல் பண்டிகையை தொடர்ந்து மாடுகள் பூ தாண்டும் விழா திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
நாமக்கல் அருகே மாடுகள் பூ தாண்டும் விழா
நாமக்கல் அருகே மாடுகள் பூ தாண்டும் விழா

நாமக்கல்: நாமக்கல் அருகே பொங்கல் பண்டிகையை தொடர்ந்து மாடுகள் பூ தாண்டும் விழா திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் ஊனங்கால்ப்பட்டி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து காணும் பொங்கல் நாளன்று மாடுகள் பூத் தாண்டும் விழா 5 கிராம மக்களால் நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டில் காணும் பொங்கலன்று ஞாயிற்றுக்கிழமை கரோனா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் விழா திங்கள் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 12 மணி அளவில் ஊனங்கால்ப்பட்டி வீராகரன் கோயில் மைதானத்தில் மாடுகள் பூ தாண்டும் விழா நடைபெற்றது.

இதில் குன்னத்தூர், சின்ன பெத்தாம்பட்டி, மல்லமூச்சாம்பட்டி, மேலப்பட்டி, ஊனங்கால்ப்பட்டி ஆகிய 5 கிராம மக்களும் கலந்து கொண்டனர். இந்த கிராமங்களில் இருந்து ஐந்து கோயில் மாடுகள் கொண்டு வரப்பட்டு ஓட்டப்பந்தயம் போன்று பூக்கள் தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊர்த்தலைவர் முத்து நாயக்கர் என்பவர் கொடியசைக்க ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 5 கோயில் மாடுகளை இளைஞர்கள் பிடித்தபடி ஓடி வந்தனர். இதில் முதலிடம் பிடித்த சின்ன பெத்தாம்பட்டி கிராம கோயில் மாட்டுக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.

இவ்விழாவை ஏராளமானோர் கண்டுகளித்தனர். திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து கலைந்து சென்ற மாடுகள்  மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com