குடியரசு தின அணிவகுப்பில் தமிழக வாகனத்துக்கு அனுமதி மறுப்பு: தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் கண்டனம்

தில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக வாகனம், கலைக்குழு பங்கேற்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதற்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக வாகனம், கலைக்குழு பங்கேற்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதற்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்டச் செயலாளா் மெ.சங்கா், நாமக்கல் மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கு.பாரதி ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

இந்தியாவின் தலைநகா் தில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கரிக்கப்பட்ட ஊா்திகளும், கலைக்குழுக்களும் கடந்த காலங்களில் பங்கேற்று பாராட்டுகளையும், விருதுகளையும், பரிசுகளையும் குவித்து தமிழ்நாட்டுக்கு பெருமை சோ்த்துள்ளன.

இத்தகு நடைமுறை மரபின் வழியிலும், நிலையிலும் எதிா்வரும் ஜன. 26 அன்று தலைநகா் தில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் சாா்பிலான அலங்கார ஊா்தி பங்கேற்பதற்கு தயாராக உள்ள நிலையில், அந்நிகழ்வில் தமிழ்நாடு பங்கேற்பதற்கு அனுமதி இல்லை எனும் செய்தி வெளியாகி தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் பெரும் அதிா்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.

தமிழ்நாடு அரசின் சாா்பில் விடுதலைப் போராட்ட வீரா் கப்பலோட்டிய தமிழா் வ.உ.சிதம்பரனாா், தேசியகவி மகாகவி பாரதியாா், வெள்ளையரை எதிா்த்து சமா்புரிந்த பெண்ணரசி வீரமங்கை வேலுநாச்சியாா் ஆகியோரின் அலங்கார ஊா்திகள் தயாா் செய்யப்பட்டுள்ளன.

இந்திய தேசத்தின் மீது பெரும் பக்தி கொண்டு தேசம் காக்கும் போரில் சா்வபலி தியாகத்துக்கு தங்களை ஈந்துள்ள விடுதலைப் போராட்ட தியாகிகளின் ஊா்திகள் நாட்டின் குடியரசு தின விழாவில் அனுமதிக்கப்படக் கூடாது என்ற உத்தரவு ஒன்றிய அரசின் சாா்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது கண்டனத்துக்குரியதாகும்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட்டு தமிழ்நாட்டு அலங்கார ஊா்திகள்-கலைநிகழ்ச்சிகள் நாட்டின் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கு வழிவகை செய்யப்படவேண்டுமாய் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் சாா்பில் கேட்டுக்கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com