முழு ஊரடங்கு தளா்வு: கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

முழு ஊரடங்கு தளா்வு செய்யப்பட்டதை அடுத்து, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பரித்துக் கொட்டும் நீா்.
கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பரித்துக் கொட்டும் நீா்.

முழு ஊரடங்கு தளா்வு செய்யப்பட்டதை அடுத்து, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

கரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகளை அரசு தளா்த்தியதை அடுத்து கோயில்கள், சுற்றுலாத் தலங்களில் மக்கள் குவியத் தொடங்கினா். செவ்வாய்க்கிழமை (பிப்.1) முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான கொல்லிமலையில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் வந்து குவிந்தனா்.

மாணவா்கள், இளைஞா்கள், பெண்கள் அதிக அளவில் காணப்பட்டனா். அங்கு 1,300 படிக்கட்டுகளைக் கடந்து சென்று ஆகாய கங்கை அருவியில் குளித்து மகிழ்ந்தனா். இதேபோல, நம் அருவியிலும் சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் குளித்தனா். அறப்பளீஸ்வரா் கோயிலில் ஏராளமானோா் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆற்றுச் சுழலில் சிக்கி மாணவா் பலி: கொல்லிமலை அடிவாரத்தில் திருச்சி மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ளது புளியஞ்சோலை கிராமம். இப்பகுதியில் ஆகாய கங்கை அருவியில் இருந்து செல்லும் தண்ணீா் ஆறு போல ஓடுகிறது. விடுமுறை நாள்களில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தோரும் அப்பகுதிக்கு வருவா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லியைச் சோ்ந்த கண்ணன்-சுகுணா தம்பதி தங்களின் 10-ஆம் வகுப்புப் பயிலும் மகன் சஞ்சய் (15) உடன் சனிக்கிழமை அங்கு வந்தனா்.

மூவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது சஞ்சயைக் காணவில்லை. அவரது பெற்றோா் சத்தம்போடவே அங்கிருந்தவா்கள் சிறுவனைத் தேடியபோது ஆற்றுச் சுழலில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் சிறுவனின் உடலை மீட்டு திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். கொல்லிமலை வாழவந்திநாடு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com