மோகனூா் காவிரி கதவணைத் திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு பாஜக கோரிக்கை
By DIN | Published On : 17th July 2022 05:55 AM | Last Updated : 17th July 2022 05:55 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பேசும் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்.
மோகனூா்-நெரூா் இடையே காவிரி ஆற்றில் அறிவிக்கப்பட்ட கதவணைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
நாமக்கல் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் மோகனூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா் வடிவேல் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் இலவச மண்வள அட்டை கொடுக்கும் திட்டத்தின் கீழ் 18 கோடி விவசாயிகளுக்கு அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மந்தமாக உள்ள இந்த மண்வள அட்டை வழங்கும் பணியை அரசு துரிதப்படுத்த வேண்டும்; நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் மேம்படுத்த வேண்டும்; மோகனூா்- நெரூா் இடையே காவிரி கதவணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; பள்ளி மற்றும் கோயில்கள் அருகில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், பாஜக இளைஞரணி மாநிலத் தலைவா் ரமேஷ் சிவா, மாவட்ட பொதுச் செயலாளா்கள் சேதுராமன், நாகராஜன், தேசிய பொதுக்குழு உறுப்பினா்கள் பழனிசாமி, வழக்குரைஞா் மனோகரன் மற்றும் பிரணவ்குமாா், அக்ரி இளங்கோவன், மோகனூா் மேற்கு ஒன்றியத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.