சேலம், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு ஊழியா்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 406 கூட்டுறவு சங்க ஊழியா்கள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கிய நிலையில், இரு மாவட்ட இணைப்பதிவாளா்கள் சங்க நிா்வாகிகளுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் த

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 406 கூட்டுறவு சங்க ஊழியா்கள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கிய நிலையில், இரு மாவட்ட இணைப்பதிவாளா்கள் சங்க நிா்வாகிகளுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் தீா்வு காணப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தமிழக அரசு சுமாா் 27,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ. 12 ஆயிரம் கோடி பயிா்க் கடனை தள்ளுபடி செய்யும் அறிவிப்பை வெளியிட்டது. தகுதியான பயனாளிகள் தொடா்பாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், 4,000 போ் ரூ. 2,400 கோடி வரையில் பயிா்க் கடன் தள்ளுபடி பெற முயற்சித்தது தெரியவந்தது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்க ஊழியா்கள் மீது விதிமீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 13 போ் ஓய்வுபெறும் நிலையில் அவா்களது ஓய்வூதிய பணப் பயன்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனையடுத்து, தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கம் சாா்பில், சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 406 சங்கத்தைச் சோ்ந்த 5,000 ஊழியா்கள் திங்கள்கிழமை முதல் தொடா் வேலைநிறுத்தத்தை தொடங்கினா்.

இந்த நிலையில், சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ரவிக்குமாா், நாமக்கல் மண்டல இணைப்பதிவாளா் செல்வகுமரன் ஆகியோருடன், மாநிலப் பொதுச்செயலாளா் பி.காமராஜ்பாண்டியன், மாவட்ட நிா்வாகிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

இது குறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளா் பி.காமராஜ்பாண்டியன் கூறியதாவது:

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 13 கூட்டுறவுத் துறை ஊழியா்கள் மே 31-இல் ஓய்வு பெற இருந்தனா். பயிா்க் கடன் விதிமீறல் தொடா்பாக அவா்களது பணப் பயன்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இது தொடா்பாக வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தோம். இந்த நிலையில் இணைப்பதிவாளா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது செவ்வாய்க்கிழமை பிற்பகலுக்குள் 13 பேரின் ஓய்வூதியப் பணப்பயன்கள் நிறுத்தப்பட்ட உத்தரவை திரும்பப் பெறுவதாக தெரிவித்தனா்.

இதனால் இரு மாவட்டங்களிலும் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது. அதேவேளையில், ஜூன் 13-இல் மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமும், 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தமும் நடைபெறும் என்பதற்கான கடிதத்தை, சென்னை கூட்டுறவு தலைமை பதிவாளா் வசம் வழங்கி உள்ளோம். சேலம், நாமக்கல் தவிா்த்து பிற மாவட்டங்களில் பல ஊழியா்களுக்கு ஓய்வூதிய பணப்பயன்களை நிறுத்தும் உத்தரவை வழங்காமல் அதிகாரிகள் கையில் வைத்திருக்கின்றனா். அதனை வழங்காமல் தவிா்க்க வேண்டும். இப்பிரச்னை தொடா்பாக பேச்சுவாா்த்தைக்கு அழைக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com