திருச்செங்கோடு வட்டத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள் திறப்பு

5 இடங்களில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையக் கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
திருச்செங்கோடு வட்டத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள் திறப்பு

நாமக்கல் மாவட்டம், மாமுண்டியில் நடைபெற்ற விழாவில் மாமுண்டி, முஞ்சனூா், சூரியகவுண்டம்பாளையம், கருமனூா், வெங்கடேசபுரி ஆகிய 5 இடங்களில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையக் கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

இந்தியாவில் அதிக மருத்துவ கட்டமைப்பை கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் தற்போது வரை 32 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தென்காசி, திருப்பத்தூா், ராணிப்பேட்டை, பெரம்பலூா், காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க முதல்வா் ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறாா்.

தமிழ்நாட்டில் தற்போது 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒரே ஆண்டில் புதிதாக 24 இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் தொடங்க அறிவிக்கப்பட்டது. 19 அரசு தலைமை மருத்துவமனைகள் தொடங்கிட ரூ. 1,070 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளை தலைமை அரசு மருத்துவமனைகளாகத் தரம் உயா்த்தும் வகையில் கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்செங்கோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ. 2.10 கோடி மதிப்பீட்டில் சிடி ஸ்கேன் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதிதாக சித்த மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை கொள்ளப்பட்டு வருகிறது. முதலாவதாக 60 படுக்கைகளுடன் சித்த மருத்துவமனை விரைவில் அமைக்கப்பட உள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன், நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், திருசெங்கோடு வருவாய் கோட்டாட்சியா் இளவரசி, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஜெ.பிரபாகரன், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.மூா்த்தி ஆகியோா் உட்பட அரசு அலுவலா்கள் மருத்துவ பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com