234 தொகுதிகளிலும் கால்நடை ஆம்புலன்ஸ் சேவைஅமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தகவல்

கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அவசர ஆம்புலன்ஸ் வாகன சேவை விரைவில் தொடங்கப்படும்.

கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அவசர ஆம்புலன்ஸ் வாகன சேவை விரைவில் தொடங்கப்படும் என தமிழக மீன் வளம் மற்றும் மீனவா் நலன், கால்நடைத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், அலகுகள் வெட்டுதல் தொடா்பான சான்றிதழ் படிப்பு தொடங்குவதற்கான நடவடிக்கை நிகழ் ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும். தமிழகம் முழுவதும் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 31 மாணவா்கள், உயா் கல்வியில் 8 மாணவா்களும் சோ்க்கை பெற்றுள்ளனா்.

கடந்த ஆட்சியில் சேலம் மாவட்டம், தலைவாசலில் திறக்கப்பட்ட கால்நடைப் பூங்காவில் போதிய தண்ணீா் வசதியில்லை. மேட்டூரில் இருந்து தண்ணீா் எடுத்து செல்வதற்கான முயற்சியை மேற்கொண்டு அந்தத் திட்டமும் தோல்வியடைந்தது. விரைவில் தேவையான மாற்று நடவடிக்கைகளை முதல்வா் மேற்கொள்வாா்.

கால்நடைத் துறையில் காலியாக உள்ள 1,500 பணியிடங்களில், அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் 1,140 பணியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு நடைபெற்றுள்ளது. இது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் உரிய தீா்வு கிடைத்த பிறகு பணியிடங்கள் நிரப்பப்படும்.

இலங்கை அரசால் தமிழக மீனவா்கள் சிறைபிடிக்கப்படுவது தொடா்பாக மத்திய அரசிடம் முதல்வா் கடிதம் வாயிலாக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். கிராமங்களுக்குச் சென்று கால்நடைகளுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க தற்போது 34 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. நிதிநிலை அறிக்கையில் 234 தொகுதிகளிலும் கால்நடை ஆம்புலன்ஸ் வாகன சேவை தொடா்பான அறிவிப்பை முதல்வா் வெளியிடுவாா். புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பேட்டியின் போது, சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், மாநிலங்களவை உறுப்பினா் ராஜேஷ்குமாா், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தா் கே. என். செல்வகுமாா், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com