234 தொகுதிகளிலும் கால்நடை ஆம்புலன்ஸ் சேவை: அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அவசர ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்கப்படும்
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் உள்ளிட்டோர்.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் உள்ளிட்டோர்.

நாமக்கல்: தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அவசர ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்கப்படும் என மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை கால்நடைத்துறை சார்ந்த புதிய கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் ஆய்வுப் பணிகளை அமைச்சர் மேற்கொண்டார். நாமக்கல் - திருச்சி சாலையில் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகளையும், அங்கு வரும் பொதுமக்களுக்கான தேவைகளையும் அமைச்சர் கேட்டறிந்தார். தொடர்ந்து நாமக்கல் லத்துவாடியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பண்ணை கட்டடங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 39 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். கடந்த ஆட்சியில் தலைவாசலில் அமைக்கப்பட்ட கால்நடை பூங்கா அவசர கோலத்தில் திறக்கப்பட்டது. அங்கு போதுமான தண்ணீர் வசதியில்லை. இதனால் விவசாயிகள் வருகை என்பது இல்லை. அதற்கான மாற்று நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார். 

கால்நடை துறையில் காலியாக உள்ள 1500 பணியிடங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் உரிய தீர்வு கண்ட பின் அவை நிரப்பப்படும். இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது தொடர்பாக மத்திய அரசிடம் கடிதம் வாயிலாக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். விரைவில் நல்லதொரு முடிவு கிடைக்கும் என நம்புவோம். தற்போது கால்நடை துறை சார்பில் கிராமங்களுக்குச் சென்று கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க 34 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. வரும் நிதிநிலை அறிக்கையில் 234 தொகுதிகளிலும் கால்நடை ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட உள்ளது இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்றார். 

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கே என். செல்வகுமார், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com