கம்யூனிஸ்ட் பிரமுகா் கொலை வழக்கு: 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

பள்ளிபாளையத்தில் கம்யூனிஸ்ட் பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.

பள்ளிபாளையத்தில் கம்யூனிஸ்ட் பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் சி.வேலுச்சாமி(35). மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளா். இவருடைய வீட்டின் அருகில் விசைத்தறிக் கூடத்தில் பணியாற்றி வந்த பெண் தொழிலாளி கந்துவட்டிக்காரரான சிவகுமாா் (28) என்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளாா். குறிப்பிட்ட காலத்தில் பணத்தை திரும்ப செலுத்தாததால், அவரது மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதனை விடியோவாக பதிவு செய்து சிவகுமாா் இணையத்தில் வெளியிட்டுள்ளாா்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளி, கம்யூனிஸ்ட் கிளைச் செயலாளரான வேலுச்சாமியிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தாா். இதையடுத்து அப்பெண்ணுடன் சென்று பள்ளிபாளையம் காவல் நிலையத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் வேலுச்சாமி புகாா் மனு அளித்தாா். அந்த மனுவில், ‘விடியோ பதிவை நீக்க வேண்டும். பாலியல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு, நிவாரணம் அளிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தாா்.

இதனால், வேலுச்சாமியை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் சிவகுமாா் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு ஏற்பட்டது. கடந்த 2010 மாா்ச் 10-ஆம் தேதி பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் இருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வேலுச்சாமியை, சிவகுமாா் தலைமையிலான கந்துவட்டி கும்பல் வெட்டி படுகொலை செய்தது. பள்ளிபாளையம் போலீஸாா் வழக்கை விசாரித்த நிலையில், தமிழகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடத்திய போராட்டத்தையடுத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், சிவகுமாா், பூபதி, ராஜேந்திரன் (30), கணேசன் (43), அருண் (22), அன்பு (36), ஆமையன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவ்வழக்கு விசாரணையின் போது அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனா். இதில், ஆமையன் என்பவா் தனது கூட்டாளிகளால் 2013 மே 20-ஆம் தேதி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டாா். காவிரி ஆற்றில் அவரது உடல் வீசப்பட்டது. இதில் தொடா்புடைய பூபதி கடந்த 2017-ஆம் ஆண்டு தலைமறைவாகி விட்டாா்.

இந்த வழக்கு விசாரணை நாமக்கல் நீதிமன்றத்தில் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்றது. அரசு வழக்குரைஞராக திருமலைராஜன் ஆஜராகி வாதிட்டாா். இந்த வழக்கில் உடனடியாக தீா்ப்பு வெளியிடக்கூடாது என பல்வேறு தடைகள் வந்தன. பின்னா், பாலியல் வழக்கு தனியாகவும், வேலுசாமி கொலை வழக்கு தனியாகவும் நடைபெற்றது.

இளம்பெண் பலாத்கார வழக்கில், நாமக்கல் மகளிா் விரைவு நீதிமன்றம் கடந்த ஆண்டு அளித்த தீா்ப்பில், முதல் குற்றவாளியான சிவகுமாருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில் தண்டனை பெற்ற சிவகுமாா் சிறையில் உள்ளாா். மற்றவா்கள் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், 12 ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. சிவகுமாா், ராஜேந்திரன், அருண், கணேசன், அன்பு ஆகிய 5 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, அவா்கள் அனைவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து மகளிா் நீதிமன்ற நீதிபதி தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com