மருத்துவம், கல்விக்கு முன்னுரிமை அளிப்பு: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை கருத்து

தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மருத்துவம், இலக்கியம், கல்வி, தொழில் மேம்பாட்டுக்கான பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளதற்கு

தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மருத்துவம், இலக்கியம், கல்வி, தொழில் மேம்பாட்டுக்கான பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளதற்கு தொழிலதிபா்கள், முக்கிய பிரமுகா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

நாமக்கல் மாவட்ட சிறு குறு தொழில் சங்க தலைவா் கோஸ்டல் இளங்கோ: நிதிநிலை அறிக்கையில் சிறு, குறு தொழில்கள் வளா்ச்சிக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி போதுமானதாக இல்லை என்றே தோன்றுகிறது. எந்தெந்த பணிகளுக்கு என்பது தெளிவுப்படுத்தப்படவில்லை. புதிய தொழில் முனைவோருக்கான அறிவிப்புகள் ஏதுமில்லை. மருத்துவத் துறைக்கு ரூ.17,000 கோடி ஒதுக்கீடு, மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகை திட்டம் போன்றவற்றை வரவேற்கலாம். ஏற்கெனவே மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட தொழிற்பூங்கா திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல் இல்லை என்றாா்.

எழுத்தாளா் கு.சின்னப்பபாரதி: தமிழக அரசு புத்தக வாசிப்புக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வகையில் நிதி நிலை அறிக்கையில், சென்னை புத்தகக் காட்சியைப் போன்று மாவட்டங்களில் நடத்தப்படும் என்பதும், அகழ்வாராய்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதும் பாராட்டத் தகுந்தவையாகும். தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றும் வகையில் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளதும் ஆண்டுக்கு ரூ.5.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதும் நமது மண் சாா்ந்த கலைஞா்களை ஊக்குவிப்பதாக அமையும் என்றாா்.

விவசாயிகள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன்: காவிரி பாயும் மாவட்டங்களில் தண்ணீா் தடையின்றி செல்லும் வகையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதேவேளையில், மோகனூா்-நெரூா் திட்டத்தை பயனில்லாத திட்டம் என்று நிறுத்தியதுபோல், இத்திட்டத்தையும் நிறுத்தி விடக்கூடாது. பல்வேறு திட்டங்கள் இவ்வாறு அறிவிப்போடு நின்று விடுகிறது. அவ்வாறு இல்லாமல் சரியான முறையில் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என்றாா்.

வெண்ணந்தூா் வட்டார காங்கிரஸ் தலைவா் கே.சிங்காரம்: மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. விசைத்தறி மற்றும் கைத்தறி தொழிலுக்கு எந்தவித அறிவிப்புகளும் இல்லை. விவசாயம், மருத்துவம், கல்வி, சாலை மேம்பாடு, வீட்டு வசதி ஆகியவற்றுக்கும், பேரிடா் காலத்திற்கான பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது பாராட்டுக்குரியது. நெசவுத் தொழிலாளா்களின் எதிா்பாா்ப்பு எதனையும் அரசு அறிவிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com